உயிரை ஊடுருவும் குளிர்... வடமாநிலங்களில் பலியாகும் உயிர்கள்... ஒரு ரிப்போர்ட்
டெல்லி: வடமாநிலங்களில் குளிர் வாட்டி வதைக்கிறது. எலும்பை துளைத்து உயிர்வரை ஊடுருவும் குளிரை தாங்க முடியாமல் உறைந்து போகின்றனர் மக்கள். டெல்லியில் கடந்த வாரம் 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர்வாட்டி எடுத்துள்ளதாக புள்ளி விபரம் பதிவாகியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் வரலாறு காணாத குளிர் வாட்டி வருகிறது. கடும் குளிர் காற்றும் வீசி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோரக்பூர், பெரெய்லி, காசிப்பூர், கான்பூர் மற்றும் லக்னோ ஆகிய பகுதிகளில் நேற்று வெப்பநிலை ஜீரோ டிகிரியைவிட குறைந்து மைனஸ் டிகிரிக்கு சென்றுவிட்டது.
இந்த ஆண்டு மட்டும் வாட்டி வதைக்கும் குளிரை தாங்க முடியாமல் 200பேர் வரை உயிரிழந்திருப்பதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. உறையவைக்கும் பனியினால் காஷ்மீர், உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் கொட்டும் பனி
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ நகரில் மைனஸ் 3 டிகிரியை தொட்டுள்ளது வெப்பநிலை. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் மிதமாக பனி கொட்டி வருகிறது. இதனால் சாலைகளிலும், வீட்டின் தாழ்வாரங்கள். மரங்களின் மீது பனிப் போர்வை போர்த்தப்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவு இன்னும் 72 மணிநேரத்திற்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மைனஸ் டிகிரி வெப்பநிலை
ஸ்ரீநகரில் நிலவும் குளிரின் காரணமாக, புகழ் பெற்றதால் ஏரி உட்பட அனைத்து நீர்நிலைகளும் உறைந்துள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் பகுதியில் மைனஸ் 9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ளது. குல்மார்க் பகுதியில் மைனஸ் 10 டிகிரி செல்சியஸ், லே பகுதியில் -12.6 டிகிரி செல்சியஸ், கார்கில் பகுதியில் -15.8 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது. வாட்டி வதைக்கும் குளிருக்கு அஞ்சி சுற்றுலா பயணிகள் அறைக்குள்ளேயே முடங்கிப்போயுள்ளனர்.

உ.பியில் கடுங்குளிர்
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு வாரகாலமாகவே குளிர் வாட்டி வதைக்கிறது. ஆக்ரா, லக்னோ மற்றும் கான்பூரில் வெப்பநிலை பூஜ்ஜியத்தை எட்டியுள்ளது. கோரக்பூர் மற்றும் காசிப்புரில் முறையே -10 டிகிரி, -9 டிகிரியாகவும், லக்னோவில் 0.7 (-8) டிகிரியாகவும், கான்பூரில் -1.1 டிகிரியாகவும் பதிவானது.

வாட்டி வதைக்கும் குளிர்
மீரட் பகுதியிலும் வாரணாசி பகுதியிலும் இரவு நேர வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டது. பரேலியில் சாதாரண வெப்பநிலையை விட சற்று கூடுதலாக இருந்தது. பாராங்கி, முசாபர், ஹர்டோய் மற்றும் பிஜ்னோர் மாவட்டங்களில் குளிர் வாட்டி எடுக்கிறது. எலும்பை ஊடுருவும் குளிர் காற்று இன்னும் 48 மணிநேரத்திற்கு வீசக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பஞ்சாப், ஹரியானா பனிப்பொழிவு
இதேபோல் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் ரெயில் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

பீகாரில் கடுங்குளிர்
பாட்னா மற்றும் பாகல்பூரில் குறைந்த பட்ச வெப்பநிலை 1 டிகிரி செல்சியசாக உள்ளது. காலை நேரத்தில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக ரயில் மற்றும் விமானப்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பனிக்காற்றின் வேகம் தாங்காமல் இதுவரை 50பேர் உயிரிழந்து விட்டதாக பீகார் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

போக்குவரத்து பாதிப்பு
காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலையில் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டம் காரணமாக 40க்கும் மேற்பட்ட ரயில்களை வடக்கு ரயில்வே 2 வாரத்துக்கு ரத்து செய்துள்ளது.

குளிரிருக்கு பலியாவோர் அதிகம்
இந்த கடுங்குளிரைத் தாங்க முடியாமல் தியோரியாவில் 5 பேரும், காசிப்பூர், குஷிநகர் மற்றும் மகாராஜ்கஞ்ச் ஆகிய பகுதிகளில் தலா 4 பேரும், பாலியா, ரேபரேலி மற்றும் ஏத்தா ஆகிய பகுதிகளில் தலா 3 பேரும், பிஜ்னோர், மிர்சாபூர், சந்தவ்லி பகுதிகளில் தலா 2 பேரும், பாரெய்ச் மற்றும் ஹத்ராசில் தலா ஒரு நபரும் இறந்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் குளிருக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications