ஆண்களை அண்ணேன்னு கூப்பிட்டா பாதுகாப்பாம்... இது கர்நாடக அமைச்சரின் கூத்து

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மரணமடைந்தார். இதனையடுத்து நாடுமுழுவதும் பெண்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கர்நாடகாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் சி.டி. ரவி பெண்களின் பாதுகாப்பிற்காக 12 அம்சத் திட்டத்தை அறிவித்துள்ளார். கல்லூரிகளில் படிக்கும் பெண்கள், ஆசிரியைகள் பாதுகாப்பிற்காக சகோதரத்துவத்தை வலியுறுத்த வேண்டும். இதற்காக விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் அமைச்சர் சி.டி.ரவி.
இன்றைக்கு பல இடங்களில் பெற்ற தகப்பனே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வதும், உடன்பிறந்த சகோதரனே வன் கொடுமை செய்வதும் அதிகரித்து வருகிறது.
இந்த அமைச்சர் சொல்வதைப் போல யாரோ ஒருவனை அண்ணா என்று அழைத்தால் அவர்கள் சகோதர பாசத்தோடு அணுகுவார்கள் என்பது என்ன நிச்சயம்?.
அசரம்பாபு என்ற சாமியார், டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போது அந்தப் பெண் 6 கயவர்களையும் பார்த்து ‘சகோதரா' என்று அழைத்தால் அவர்கள் அந்தப் பெண்ணை ஒன்றும் செய்யாமல் விட்டிருந்திருப்பார்கள் என்று தத்துவ முத்தினை உதிர்த்தார். இந்த கருத்தை வலியுறுத்தும் வகையில் உள்ளது கர்நாடக அமைச்சரின் செயல்.
சகோதரா என்று அழைத்தால் மட்டும் காம வெறிபிடித்த கயவர்கள் பெண்களை விட்டு விடுவார்களா என்ன?. மதுவாலோ காம வெறியாலோ ஒரு பெண்ணை வெறும் சதைப்பிண்டமாகக் காணும் மிருகம் எதற்குக் கட்டுப்படும்?.
வட இந்தியாவில் ராக்கி என்னும் பண்டிகை மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு அதில் பெண்கள் ஆணின் கையில் ராக்கி என்னும் கயிறைக் கட்டி அவரை சகோதரனாக ஆக்கிக் கொள்வது வழக்கம். இதை மிகவும் மதித்த ஹிந்து/ முஸ்லிம் அரசர்கள் அன்றும் உண்டு. இன்றைக்கும் இதை மதிக்கிற ஹிந்து/ முஸ்லிம் ஆண்கள் வட இந்தியாவில் அதிகம்.
அப்படி ஒரு நல்ல பண்பாடு இருந்தும் ஏன் ஒரு பெண்ணை சகோதரியாக, மகளாக அல்லது குறைந்த பட்சம் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய சக மனித ஜீவனாக நம்மால் பார்க்க இயலவில்லை?.
பெண்ணை விட ஆண் உயர்வு என்னும் பிற்போக்கான அணுகுமுறை இருக்கும் வரை அசரம்பாபு, அமைச்சர் சி.டி. ரவி ஆகியோர் சொல்வதைப் போல அண்ணா என்று அழைத்தாலும் பெண்களை உடல்ரீதியாக சீரழிக்க நினைக்கும் கயவர்களின் எண்ணம் என்றைக்கும் மாறப்போவதில்லை என்பதே உண்மை.












Click it and Unblock the Notifications