கோவாவுக்கு சுற்றுலா, நைட் கிளப்பில் மோதல்: சென்னை வாலிபர் குத்திக் கொலை

சென்னை கொடுகையூர் காந்தி நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் மதன் (29). தனியார் நிறுவன ஊழியர். பொங்கல் விடுமுறையைக் கழிக்க அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் கோபி, சுரேஷ் உள்ளிட்ட 15 பேருடன் சேர்ந்து கடந்த 12ம் தேதி வேனில் கோவாவு்ககு சென்றார். கோவாவில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த பிறகு நேற்று இரவு அவர்கள் கடற்கரை பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த நைட் கிளப் ஒன்றில் டிஸ்கோ டான்ஸ் பார்க்க சென்றனர்.
மதன் மற்றும் அவரது நண்பர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு அருகே உள்ள டேபிளில் இருந்த 2 தரப்பினர் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் அதிகம் சத்தம் போட்டதால் மதன் உள்ளிட்டோர் தட்டிக் கேட்டனர். இதையடுத்து கோஷ்டி மோதலாகி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
எதிர்தரப்பினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மதன் மற்றும் நண்பர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது மதன், கோபி, சுரேஷ் மட்டும் எதிர்தரப்பிடம் மாட்டிக் கொண்டனர். அந்த 3 பேரையும் கோவா கும்பல் தாக்கியதோடு கத்தியால் குத்தியது. மேலும் அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் ரூ.40,000 ரொக்கத்தைப் பறித்துக் கொண்டு அந்த கும்பல் தப்பியோடியது. மார்பில் குத்துபட்ட மதன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற இருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தப்பியோடிய மதனின் நண்பர்கள் திரும்பி வந்தனர். மதன் பிணமாகவும், கோபியும், சுரேஷும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே ஹோட்டல் நிர்வாகம் இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மதனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் சந்தேகத்திற்கு இடமான சிலரை இந்த கொலை வழக்கில் கைது செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த கொலை குறித்து மதன் குடும்பத்தாருக்கு நேற்று இரவு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் கோவா விரைந்தனர். மதன் உடல் இன்று மாலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
மதனுக்கு மைதிலி என்ற மனைவியும், விஸ்மிதா என்ற 3 வயது மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications