'ஹிட்லர்' கருணாநிதியின் சூழ்ச்சிகளை எம்.ஜி.ஆர். ஆசியோடு வெல்வேன்: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: கருணாநிதியின் சூழ்ச்சிகளை எம்.ஜி.ஆரின் ஆசியோடும், தொண்டர்களின் ஆதரவோடும் வென்றெடுப்பேன் என்று அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அதிமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

அயராத உழைப்பு, கவரும் சிரிப்பு, கனிவான பார்வை, கருணை உள்ளம், வள்ளல் தன்மை ஆகியவற்றின் மொத்த உருவமாக விளங்கி, நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு, மக்களின் மனங்களை கொள்ளை கொண்ட மனிதப் புனிதர், அதிமுக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நமக்கெல்லாம், தமிழக மக்களுக்கெல்லாம் ஒரு பொன்னாள்.

அவரது 96வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் இந்த நன்னாளில், அவருடைய பெருமைகளையும், அவர் இந்த மண்ணுக்கு செய்த நன்மைகளையும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அண்ணாவின் இதயக் கனியாக விளங்கிய எம்.ஜி.ஆர்., அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட திமுகவின் வளர்ச்சிக்கு வேராகவும், உரமாகவும் விளங்கினார். அண்ணா கண்ட இயக்கத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதையே குறிக்கோளாகக் கொண்டு பாடுபட்டார். 1967ம் ஆண்டு திமுகவை தமிழகத்தின் ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர் எம்.ஜி.ஆர்.. அண்ணா 1967ம் ஆண்டு தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முன்னேற்றப் பாதையை நோக்கி நகர ஆரம்பித்தது.

குறுகிய காலத்தில் வியத்தகு சாதனைகளை புரிந்த அண்ணா, துரதிருஷ்டவசமாக நோய்வாய்ப்பட்டு 1969ம் ஆண்டு இயற்கை எய்தினார்.

அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், தமிழகத்தை அடுத்து ஆளப்போவது யார்? என்ற கேள்வி தமிழக மக்களின் மனதில் எழுந்தது. ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், அண்ணாவிற்கு அடுத்த நிலையில் இருந்தவருமான நாவலர் நெடுஞ்செழியன் பெயரை பொதுமக்கள் கூறி வந்தனர். திமுகவின் கட்சி அமைப்புகளிலேயும் நாவலருக்கே ஆதரவு காணப்பட்டது.

இதனை அறிந்து கொண்ட கருணாநிதி, நாற்காலியை எப்படியாவது பிடித்தாக வேண்டும் என்ற எண்ணத்தில், ராஜாஜியை சந்தித்து தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார். அதற்கு ராஜாஜி, "உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டும் என்றால், எம்.ஜி.ராமச்சந்திரனைப் போய் பார்" என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்.

ராஜாஜியின் அறிவுரைப்படி, கருணாநிதி எம்.ஜி.ஆரைச் சந்தித்து, தன்னை முதல்வர் நாற்காலியில் அமர்த்த உதவி புரியும்படி மன்றாடினார். "தமிழ் தான் எனது உயிர் மூச்சு. தமிழ் சமுதாயத்திற்காகவும், இயக்கத்திற்காகவும், எனது மக்களை மறந்து அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறேன். நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவன் ..." என்றெல்லாம் எம்.ஜி.ஆரிடம் சொல்லி கருணாநிதி யாசகம் கேட்டார்.

தன்னை துப்பாக்கியால் சுட்டவரை, தாக்க முயன்ற தன் விசுவாசிகளிடம், "அவரை ஒன்றும் செய்யாதீர்கள், அவரை பத்திரமாக அனுப்பி வையுங்கள்" என்று கூறி ஏசுபெருமானின் நிழலாக வாழ்ந்து காட்டிய வள்ளல் அல்லவா நம் எம்.ஜி.ஆர்! யார் கேட்டு "இல்லை" என்று சொல்லி இருக்கிறார் அவர்? பொன்னோ, பொருளோ என்றால் உடனடியாக அள்ளிக் கொடுத்து இருப்பார். ஆனால், கருணாநிதி கேட்டதோ அரியாசனம். சில நிமிடங்கள் யோசித்தார். பின்னர், "கவலைப்படாமல் செல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறி கருணாநிதியை வழியனுப்பி வைத்தார்.

அப்பொழுதே எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் அவரே முதலமைச்சர் ஆகி இருக்கலாம். அந்த அளவுக்கு கட்சியினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அவருக்கு செல்வாக்கு இருந்தது. ஆனால், தான் முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இல்லை. சுயநலம் இல்லாத எம்.ஜி.ஆர்., கருணாநிதியை முதலமைச்சராக்க பரிந்துரைத்தார். அவர் பரிந்துரை செய்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக, வேறு வழியின்றி மற்றவர்களும் ஒப்புக் கொண்டனர். அதனையடுத்து எம்.ஜி.ஆரின் முயற்சியால், தயவால், ஆதரவால், அவர் போட்ட பிச்சையால் கருணாநிதி அன்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார்.

1971ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், இரண்டாவது முறையாக புரட்சித் தலைவரின் தயவால் முதலமைச்சரானார் கருணாநிதி. இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், கருணாநிதியின் சுயநல சுயரூபம் வெளி வர ஆரம்பித்தது. தன்னலம் தலைவிரித்து ஆட ஆரம்பித்தது. "கழகமே குடும்பம்" என்று இருந்த இயக்கத்தை "குடும்பமே கழகம்" என்று மாற்றத் தொடங்கினார். அண்ணா தோற்றுவித்த இயக்கத்தையும், ஆட்சியையும் தவறாகப் பயன்படுத்தி ஊழல்வாதியாக உருவெடுத்தார் கருணாநிதி. நாட்டு நலன் கருதி, கருணாநிதியின் தவறைக் கண்டித்து திருத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார் எம்.ஜி.ஆர்.

அவரது அறிவுரையை புறக்கணித்து, அவர் செய்த உதவியை மறந்து கட்சியை விட்டே வெளியேற்றினார் கருணாநிதி.

அண்ணாவுக்கு பிறகு அவர் கண்ட கழகம், நோக்கம் சிதறி, திசை மாறிய பறவை போல் திருக்குவளை குடும்பத்தின் கோரக் கரங்களில் சிக்கி கொடூரப் பாதையில் செல்வதைக் கண்டு மனம் வெதும்பிய எம்.ஜி.ஆர், "திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்" என்ற உணர்வோடு, தமிழக மக்களின் நலன் காக்க, அண்ணாவின் பெயரில் கட்சியைத் துவக்கினார்.

இயக்கம் ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் கருணாநிதியின் அராஜகத்தையும், அக்கிரமத்தையும், சூழ்ச்சியையும் மீறி அதிமுக மகத்தான வெற்றியைப் பெற்றது. கருணாநிதி தலைமையிலான திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்திய அரசியல் வரலாற்றில், ஒரு கட்சியை தோற்றுவித்து, ஆறே மாதத்தில் இடைத் தேர்தலில் வெற்றி வாகை சூடி, ஆளும் கட்சியை அசர வைத்து, ஒரு வரலாற்று அதிசயத்தை ஏற்படுத்தியவர் நம் எம்.ஜி.ஆர்..

பின்னர், ஊழல் குற்றத்திற்காக கருணாநிதி தலைமையிலான அரசு 31.1.1976 அன்று கலைக்கப்பட்டது. 1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். தனி மனிதராக மக்கள் சக்தியை மட்டும் மையமாக வைத்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து மகுடம் சூட்டி மகத்தான முத்திரையைப் பதித்தார். இதன் மூலம் சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாய், ஹிட்லரின் அவதாரமாய் காட்சி அளித்த கருணாநிதியின் கொடுங்கோல் ஆட்சிக்கு சாவு மணி அடிக்கப்பட்டது. அதிமுக அரியணையில் அமர்ந்தவுடன், அருமையான திட்டங்களை வழங்கி, தமிழகத்தை செழுமையான பாதையில் அழைத்துச் சென்றார். புதிய மாவட்டங்கள், புதிய போக்குவரத்துக் கழகங்கள், புதிய பல்கலைக்கழகங்கள் என தமிழகம் புத்துயிர் பெற்றது.

இருப்பினும், காங்கிரஸ் கட்சியை தன் கைக்குள் வைத்துக்கொண்டு புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சியையே கலைக்க திட்டம் தீட்டினார் கருணாநிதி.

1980ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அப்போது நிலவிய ஸ்திரமற்ற சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றியை தனக்கு கிடைத்த வெற்றியாகக் கருதி, அதன் அடிப்படையில் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியைக் கலைக்க காங்கிரஸ் கட்சியைத் தூண்டிய கருணாநிதி, அதில் வெற்றியும் கண்டார். இதனையடுத்து, 1980ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்பு இருந்ததை விட கூடுதல் இடங்களைப் பிடித்து கழகம் அமோக வெற்றி பெற்றது. தீய சக்தியை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்திக் காட்டி, இரண்டாவது முறையாக முதலமைச்சரானார் எம்.ஜி.ஆர்..

1982ல், உலகமே போற்றும் சத்துணவுத் திட்டத்தை தமிழ் நாட்டிற்குத் தந்தார். 1984ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது, அவர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள புருக்லின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்ததன் காரணமாக பிரச்சாரத்திற்கு அவரால் வர முடியவில்லை. அந்தத் தருணத்தில், அவரின் சார்பாக, நான் பட்டிதொட்டியெங்கும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அதிமுக வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டேன். அதிமுக அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம், தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்று சாதனை படைத்தார் நம் எம்.ஜி.ஆர்.

அவரை அழிக்கவும், அரசியலில் இருந்து அப்புறப்படுத்தவும் தனது அதிகாரம் முழுவதையும் பயன்படுத்தி தோல்வியடைந்த கருணாநிதி, புரட்சித் தலைவரின் மறைவிற்கு பிறகு, என்னை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் என் மீது பல தாக்குதல்களை நடத்தி; பொய் வழக்குகளைப் போட்டார். அந்த சோதனைகளை எல்லாம் உங்கள் ஆதரவுடன் தவிடு பொடியாக்கி தற்போது மூன்றாவது முறையாக முதலமைச்சராக ஆட்சி புரிந்து வருகிறேன்.

இவ்வளவு அடிபட்டும் கருணாநிதியின் இயற்கை குணம் மாறவில்லை. அன்றைக்கு எம்.ஜி.ஆரின் ஆட்சிக்கு எதிராக மத்திய அரசையும், காங்கிரஸ் கட்சியையும் பயன்படுத்தி வந்த கருணாநிதி, என் தலைமையிலான கழக ஆட்சிக்கு எதிராகவும், மக்கள் மத்தியில் நமக்கு அவப் பெயரை ஏற்படுத்தவும் இன்னும் மத்திய அரசை பயன்படுத்துகிறார். என்னை அவமதிப்பதற்கு தனது கூட்டணி செல்வாக்கை உபயோகிக்கிறார்.

தமிழகத்திற்கு மின்சாரம் தராதே; மண்ணெண்ணை தராதே; காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடாதே; தமிழகத்திற்கு நிதி ஆதாரங்களைத் தராதே; தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கெல்லாம் முட்டுக்கட்டை போடு என்று அந்தத் தீய சக்தி மத்தியில் ஆளும் மைனாரிட்டி காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு கட்டளை போடுகிறது. அதற்கு நடுவண் அரசும் தலையை ஆட்டுகிறது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தன்னலம் காரணமாக அண்ணாவின் அடிப்படைத் தத்துவத்திற்கு விரோதமாக, தமிழ் நாட்டை வேட்டையாடும் வடநாட்டு ஏகாதிபத்தியத்தின் எடுபிடியாக தற்போது தீய சக்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆரின் அரசியல் அடிச் சுவட்டில் பயணம் செய்கின்ற எனக்கு, தீய சக்தியின் வக்கிர புத்தியும், பிறரை அழிக்கும் சூதுமதியும் புதிதல்ல. இந்தச் சூழ்ச்சிகளை எல்லாம் எம்.ஜி.ஆரின் ஆசியோடும், உங்கள் ஆதரவோடும் நான் நிச்சயம் வென்றெடுப்பேன் என்று இந்த நாளில் சூளுரை ஏற்கிறேன்.
.

டாக்டர் எம்.ஜி.ஆரின் 96வது பிறந்த நாளில், அவரது பெருமைகளை நினைத்து, அவர் இந்தத் தமிழ் மண்ணுக்கு செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து, தமிழர்களின் உரிமைகளை பெற்றிட, தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க மத்திய அரசை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக உருவாகும் வகையில், வருகின்ற நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றிக் கனியை பறிக்கும் அளவுக்கு உடன்பிறப்புகளாகிய நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும்; களப் பணியாற்றிட வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

எம்.ஜி.ஆரின் 96வது பிறந்த நாளை சீரோடும், சிறப்போடும் கொண்டாடும் வகையில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி மற்றும் இவைகளுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்டங்களிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஆங்காங்கே கம்பீரமாய் காட்சியளிக்கும் கழகக் கொடிக் கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து,

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி கோலாகலமாய்க் கொண்டாட வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+