வேலூரில் கள்ளக்காதலியை எரித்துக் கொன்றவர் 5 ஆண்டுகள் கழித்து கைது
வேலூர்: வேலூரில் கள்ளக்காதலியை எரித்துக் கொன்றவர் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள இடத்தில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டு கரிக்கட்டையாக கிடந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவேரிப்பாக்கம் போலீசார் இறந்தவர் யார் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்பெண் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி கலா(37) என்பது தெரிய வந்தது.
கட்டிடத் தொழிலாளியான கலாவுக்கு சக தொழிலாளியான அதே பகுதியைச் சேர்ந்த ராஜா(42) என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் காவேரிப்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
அப்போது கலாவின் நடவடிக்கைகள் சரியில்லை என்று தெரிகிறது. இதனால் கலாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ராஜா அவரை கண்டித்துள்ளார். இருப்பினும் கலாவின் போக்கு மாறவில்லை. இதற்கிடையே 18-5-2008 அன்று ராஜாவும், கலாவும் காவேரிப்பாக்கத்தில் உள்ள சினிமா தியேட்டருக்கு சென்று படம் பார்த்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா கலாவை அடித்து காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள கோபால் என்பவரின் நிலத்தில் அவரை எரித்துக் கொன்றார்.
கொலை நடந்து 5 ஆண்டுகள் கழித்து ராஜா தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு கொண்டபுரம் கிராம நிர்வாக அதிகாரி வேணுகோபாலிடம் சரண் அடைந்தார். அவர் இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் போலீசார் ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications