மாநிலம் முழுவதும் டீன்-ஏஜ் பருவத்தினருக்காக 34 கவுன்சிலிங் செண்டர்கள்: ஜெ. உத்தரவு!

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
நகர்ப்புற மக்களுக்கு இணையாக கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கச் செய்யவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு, அவசர மகப்பேறு, அறுவை சிகிச்சை போன்றவற்றிற்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் அளிக்கப்பட்டுள்ளன.
சித்தமருத்துவமனைக்கு நிதி உதவி
பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் கட்டிடங்கள் பழமையானதாகவும், போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இன்றியும் உள்ளன. இதனால் இங்கு பயிலும் மாணவ, மாணவியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, இக்கல்லூரி வளாகத்தில் 5 கோடி ரூபாய் செலவில் 7681 சதுர அடியில் 3 நிலைகள் கொண்ட அடுக்கு மாடி கட்டிடம் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் தரைதளத்தில் நிர்வாக அலுவலகமும், முதல் தளத்தில் உடற்கூறு ஆய்வுக் கூடம் மற்றும் வகுப்பறையும், இரண்டாம் தளத்தில் நுண்ணுயிரியல் ஆய்வுக் கூடம் மற்றும் வகுப்பறையும், மூன்றாம் தளத்தில் தேர்வு கூடம் மற்றும் அவைகூடம் ஆகியவைகள் இடம் பெறும்.
மனவள ஆலோசனை மையம்
தற்போதைய உலகம் போட்டிகள் நிறைந்த உலகம். இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள இயலாமையினாலும் மற்றும் குடும்ப சூழ்நிலைக் காரணமாகவும் மனதளவில் பாதிக்கப்படும் வளர் இளம் பருவத்தினரின் பிரச்சனைகளை கண்டறிந்து, அவர்களுடன் கலந்துபேசி, அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாவட்டத்திற்கு ஒரு மனவள ஆலோசனை மையம் என்று 31 மாவட்டங்களிலும், சென்னையில் 3 மையங்கள் என 34 ஆலோசனை மையங்களை ஏற்படுத்த 2 கோடியே 51 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications