தண்ணீர் பஞ்சம் வரப்போகுதாமே? தங்கத்துக்கு பதிலா தண்ணீரை வரதட்சணையா கேட்பாங்களோ?!
இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) முன்னாள் தலைவரும் திட்ட கமிஷனின் தற்போதைய உறுப்பினருமான கே.கஸ்தூரிரங்கன் எச்சரித்துள்ளார்.
மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அது தண்ணீருக்கானதாகத்தான் இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றால் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் என்பது இந்தியாவில் சவாலாக உருவெடுத்துள்ளது..
மாநிலங்களுக்கு இடையே மோதல் மற்றும் எல்லைப் பிரச்னைகளுக்கு தண்ணீர் ஒரு காரணமாக ஆகிவருகிறது. பருவநிலை மாற்றம், பொய்த்துப்போன பருவமழையால் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களுடன் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது.இந்த நிலையில் இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கிறார் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே. கஸ்தூரி ரங்கன்.

தேக்கிவைக்கும் வசதியில்லை
நாட்டின் பல பகுதிகளில் விவசாயத்துக்கு போதுமான நீர் கிடைப்பதில்லை. நாட்டில் மொத்தம் உள்ள 626 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்டவை 2009-ல் வறட்சியால் பாதிக்கப்பட்டன. இந்தியாவின் தண்ணீர்த் தேவையில் 75 சதவீதம் 3 மாதங்களில் பெய்யும் மழை மூலம் கிடைக்கிறது. ஆனால், அதை தேக்கிவைக்க போதுமான வசதிகள் இல்லை.

பாதுகாப்பான குடிநீர்
நகரப் பகுதிகளில், எல்லா வருவாய் தரப்பினரும் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கும் நிலையே உள்ளது. நகரங்களில் 40 சதவீத குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. 36 சதவீதம் குடும்பங்களுக்கு மட்டுமே கழிப்பிட வசதி உள்ளது. அசுத்தமான குடிநீர் காரணமாக பலவிதமான நோய்களுக்கு மக்கள் ஆளாகிறார்கள். இதனால் குழந்தை இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.

தப்பிக்க மாற்று வழி
உலக நாடுகள் பலவற்றில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.அத்தகைய நாடுகளில், இந்தியாவும் ஒன்று. எனவே தண்ணீர் பஞ்சத்திலிருந்து தப்பிக்க மாற்று வழிகள் குறித்து இப்போதே முடிவெடுக்க வேண்டும்.

சிக்கனமாக செலவழிங்க
தண்ணீர் எங்கே இருக்கிறது என்பதை ஆராய்வது அவசியம். தவிர இருக்கும் நீரை சிக்கனமாக செலவிடுவது, கடல் நீரை குடிநீராக மாற்றுவது மழை நீரை குடிநீராக பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும். இது குறித்த நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்ற வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் கூறியுள்ளார்.

2025 தண்ணீர் பஞ்சம்
இந்தியாவில் 12 சதவீதம் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என்று கடந்த ஆண்டு வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சரான ராபர்ட் பிளேக் கூறியுள்ளார். 2025-ல் உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மக்கள் தொகை பெருக்கம், பருவநிலை மாற்றத்தால் பனிமலைகள் உருகுதல் உள்ளிட்டவையால் தோன்றும் இதுபோன்ற சவால்களை அரசாங்கத்தால் மட்டுமே எதிர்கொள்ள முடியாது என்று பிளேக் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு என்ன அக்கறை
நம்நாட்டு இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் அமெரிக்கா தனது நாட்டு குளிர்பானங்களை அனைத்து மக்களுக்குமான பானமாக மாற்ற நம் நிலத்தடி நீரை நாசமாக்குகிறது. அதே நேரம் இநத் நாடுகளின் மீது தனக்கு எப்போதும் அக்கறை உள்ளது என்பதை போன்றும் காட்டிக் கொள்ளும் வகையில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சரான ராபர்ட் பிளேக் இதனைக் கூறியுள்ளார்.

தண்ணீர் பஞ்சம் வந்தா?
தண்ணீர் பஞ்சம் பற்றி இவ்வளவு பரபரப்பாக செய்தி போடுவது இப்போதைக்கு அவசியமா என்று கேட்கலாம். ஒருவேளை தண்ணீர் பஞ்சம் வந்தே விட்டால் என்ன செய்வது. டென்சன் ஆகாதீங்க மேல படிங்க. தினமும் குளிக்கிறவங்க எல்லோரும் பணக்காரங்களா இருப்பாங்க. தங்கத்திற்கு பதில் முப்பது குடம் தண்ணீர் வரதட்சணையாக கேட்க வாய்ப்பிருக்கிறது ஜாக்கிரதை.

தேர்தல் அறிக்கையில் தண்ணீர்
பஞ்சத்தினால் நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிடும் என்பதால் அரசின் தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்பாக நல்ல தண்ணீர் இடம் பெறும்( 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலேயே அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் சுகாதாரமான குடிநீர் வழங்கும் திட்டம் இருந்தது என்பதை இந்த சமயத்தில் நினைவு படுத்துகிறேன்)

தண்ணீரை கடத்துவார்கள்
இலவச அரிசியை இப்போது கடத்துவது போல ரயில் மூலம் கேரளாவுக்கு தமிழக அரசு வழங்கிய இலவச தண்ணீர் கேனை கடத்துவார்கள். எல்லாம் தண்ணிப்பட்ட பாட இருக்கு என்ற வார்த்தையை யாரும் உபயோகப்படுத்த மாட்டார்கள். எனவே தண்ணீர் பஞ்சம் வராமல் காத்துக்கொள்ளவேண்டியது நம் கையில்தான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications