உரத்துறையில் ரூ1,000 கோடி இழப்பு- மு.க. அழகிரியை டிஸ்மிஸ் செய்ய ஜெ. கோரிக்கை!

மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
வேளாண்மைத் தொழிலுக்கு உயிர் நாடியாக விளங்கும் உரங்கள் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு கிடைக்கக் கூடிய வகையில் ஒரு நாட்டின் உரக்கொள்கை வகுக்கப்பட வேண்டும். ஆனால், வேளாண் தொழிலை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ள இந்திய நாட்டில், ஊழலுக்கு ஊக்கமளிக்கும் வகையில், தனியார் உர உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடையும் வண்ணம் உரக்கொள்கை வகுக்கப்பட்டு, இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள் சுரண்டப்பட்டு வருகின்றனர்.
வேளாண்பெருங்குடி மக்களை காக்கும் வகையிலும், அவர்களுக்கு உதவி புரியும் வண்ணமும், உரங்களுக்கான அதிகபட்ச சில்லரை விலை நிலையாக இருக்கும் வகையில், உரத்திற்கான மானியத்தை அவ்வப்போது மாற்றி நிர்ணயிக்கும் முறையை மத்திய அரசு கடைபிடித்து வந்தது. அதாவது, உரங்களின் அதிகபட்ச சில்லரை விலை ஏறாத வண்ணம், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு விதமாக மானியம் கணக்கிடப்பட்டு உர உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்கள் விவசாயிகளுக்கு ஓரளவு நியாயமான விலையில் கிடைத்து வந்தன.
1.4.2010 முதல் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் என்ற ஒரு புதிய கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. இந்தப் புதிய உர கொள்கையின்படி, உரங்களுக்கான ஆண்டு மானியத் தொகை மத்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் அறிவிக்கப்பட்டு உர உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், உர உற்பத்தி நிறுவனங்கள் தங்களுடைய சில்லரை விற்பனை விலையை சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப நிர்ணயித்துக் கொள்கின்றன.
அதாவது, அரசு வழங்கும் மானியம் என்பது நிலையாகவும், உரத்தின் அதிகபட்ச சில்லரை விலை என்பது உர நிறுவனங்களால் அவ்வப்போது மாற்றியமைக்கக் கூடியவையாகவும் மாறிவிட்டது. இதன் காரணமாக, உரங்களின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து கொண்டு வருகிறது.
மத்திய அரசின் ஊட்டச்சத்து அளவிலான மானியம் வழங்கும் கொள்கை காரணமாக, உரங்களின் விலை இரண்டு, மூன்று மடங்கு அதிகரித்துவிட்டது. உதாரணமாக, 2010 ஆம் ஆண்டு 486 ரூபாய் என்றிருந்த 50 கிலோ டி.ஏ.பி. உரத்தின் விலை, 2012 ஆம் ஆண்டு 1,200 ரூபாயாகவும்; 50 கிலோ எம்.ஓ.பி. உரத்தின் விலை 231 ரூபாயிலிருந்து 840 ரூபாயாகவும், 50 கிலோ காம்ப்ளக்ஸ் உரம் 374 ரூபாயிலிருந்து 1,110 ரூபாயாகவும் உயர்ந்துவிட்டது.
மத்திய அரசின் இந்தத் தவறான உரக் கொள்கை காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டி, இந்த விவசாய விரோதக் கொள்கை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும்; உரங்களின் அதிகபட்ச சில்லரை விலை நிலையானதாக இருக்கும்படியான முந்தைய கொள்கையை மீண்டும் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, பிரதமருக்கு 26.6.2012 அன்று நான் கடிதம் எழுதி இருந்தேன். இருப்பினும், பிரதமர் இது குறித்து எந்தவித நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில், ஜூன் 2012-ல் உர உற்பத்தி நிறுவனங்கள் டி.ஏ.பி. உரத்தினை சில்லரை விலையில் மெட்ரிக் டன் ஒன்றுக்கு 25,000 ரூபாய் என சந்தையில் விற்பனை செய்தன என்றும், அரசு மெட்ரிக் டன் ஒன்றுக்கு 14,300 ரூபாய் மானியம் வழங்கியுள்ளது என்றும்; ஆனால், அதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட டி.ஏ.பி. உரத்தின் விலை மெட்ரிக் டன் ஒன்றுக்கு 31,900 ரூபாய்தான் என்றும்; போக்குவரத்து மற்றும் விநியோகச் செலவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், ஒரு டன்னிற்கு 5,000 ரூபாய் வரை உரக் கம்பெனிகள் எதிர்பாராத வகையில் கொள்ளை லாபம் ஈட்டியுள்ளன என்றும்; எம்.ஓ.பி. உரத்தைப் பொறுத்தவரையில், 2011-2012 ஆம் ஆண்டில், மெட்ரிக் டன் ஒன்றுக்கு 16,054 ரூபாயை அரசிடமிருந்து மானியமாக பெற்றுக் கொண்டு உபரியாக 5,500 ரூபாயை உரக் கம்பெனிகள் எடுத்துக் கொண்டுவிட்டன என்றும்; மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் அழகிரி கவனத்திற்கு இவற்றை கொண்டு வந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், 3.8.2012 அன்று, உரத் தயாரிப்பு நிறுவனங்கள், டி.ஏ.பி. உரத்தில் டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையிலும், காம்ப்ளெக்ஸ் உரத்தில் டன் ஒன்றுக்கு சுமார் 6,000 ரூபாயையும் கபளீகரம் செய்துவிட்டன என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்; உர உற்பத்தி நிறுவனங்கள் பயன்பாட்டுச் சான்றிதழை சமர்ப்பித்து, உரம் தயாரிப்பதற்கான விலையின் விவரங்களை மத்திய உரத்துறைக்கு தெரிவிக்க வேண்டுமென்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரிக்கு குறிப்பு வைத்ததாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அளவில் உரங்களின் விலை குறைந்து வருவதால், 2012-2013 ஆம் ஆண்டிற்கான உர மானியம் குறைக்கப்பட்டுவிடும் என்பதைக் கருத்தில் கொண்டு, மத்திய உரத் துறையுடன் இணைந்து உர நிறுவனங்கள் மானியம் குறைக்கப்படுவதற்கு முன்பாகவே, அதாவது உரத்திற்கான தேவை இல்லாத காலகட்டத்திலேயே உரங்களை சந்தைக்கு அனுப்புவதற்கான ஒப்புதலை மத்திய உரத் துறையிடமிருந்து பெற்றுவிட்டனர் என்பதைச் சுட்டிக்காட்டி, இது தடுக்கப்பட வேண்டும் என்று 2012 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா மத்திய அமைச்சர் அழகிரிக்கு எழுதிய குறிப்பின் மீது அழகிரியால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதுகுறித்து மத்திய அமைச்சர் அழகிரியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பிரதமரிடம் போய் கேளுங்கள்! என்று தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. என்னுடைய கடிதத்திற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்காததையும்; மத்திய இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனாவின் கடிதத்திற்கு மத்திய அமைச்சர் அழகிரி நடவடிக்கை எடுக்காததையும் பார்க்கும் போது, ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் தொகை வழங்கும் கொள்கை ஊழல் புரிவதற்குதானோ என்ற எண்ணம் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மு.க. அழகிரி பொறுப்பு வகிக்கும் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தினால் உர நிறுவனங்களுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு கொள்ளை லாபம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உர மானியம் என்ற பெயரில் அரசு பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
இந்த ஊழல் விஷயத்தில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி வாய்மூடி மவுனியாக இருப்பது மவுனம் சம்மதம் என்பதன் அடையாளம்தானோ என்று மக்கள் கேட்கின்றனர்.
மத்திய உரத்துறை இணை அமைச்சரே தன்னுடைய துறையில் ஏற்பட்டுள்ள இழப்பை தடுப்பதற்கான குறிப்பை அளித்துள்ள நிலையில், அவற்றை உதாசீனப்படுத்தி 1,000 கோடி ரூபாய் வரையிலான இழப்பை அரசுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படுத்தியுள்ள மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரியை பிரதமர் அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றும்; இதன் பேரில் மத்திய புலனாய்வுத் துறை மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு, உண்மை நிலையைக் கண்டறிந்து அரசுக்கு ஏற்பட்ட இழப்பை மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாமல், இதற்கு காரணமானவர்கள் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சகம் மறுப்பு
ஆனால் மத்திய உரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ஊடகங்களில் உரத்துறை அமைச்சகம் குறித்து வெளியான செய்திகளை மறுத்துள்ளதுடன், தனியார் நிறுவனங்கள் லாபமடையும் வகையில் உரக் கொள்கை வகுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications