மக்கள் இல்லாத மாமல்லபுரத்தை உருவாக்கத் துடிக்கும் தொல்லியல் துறைக்கு வைகோ கண்டனம்
சென்னை: மக்களை அப்புறப்படுத்திவிட்டு மாமல்லபுரத்தை விழுங்கத் துடிக்கும் மத்தியத் தொல்லியல் துறையின் தன்னிச்சையான மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உலகப் பாரம்பரியச் சின்னங்களின் இந்திய அரசின் உறுப்பினர் செயலாளர் திருமதி. சிக்கா ஜெயின் அலுவலக நேர்முக கடித எண். 6601...... 2012, நாள் 19.1.2013-ன்படி, மக்கள் இல்லாத மாமல்லபுரத்தை உருவாக்க நடவடிக்கை எடுப்பதற்காக, தமிழக சுற்றுலாத் துறையின் அரசு செயலாளர் ஹேமன்ந் குமார் சின்கா தலைமையில் மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல இயக்குனர், சென்னை மண்டல கண்காணிப்பாளர், தனியார் துறைகளைச் சார்ந்த கட்டிட வடிவமைப்பாளர், ஆலோசகர்கள், செங்கற்பட்டு கோட்ட ஆட்சியர் மற்றும் சில அதிகாரிகள் கொண்ட குழு, 28.1.2013 திங்கள்கிழமை காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை மாமல்லபுரத்தில் நகர்வலம் வந்தது.
சில குடியிருப்பு பகுதிகளை அப்புறப்படுத்த வேண்டும், கடைகளை இடித்துத் தள்ள வேண்டும், ஒரு சாலையை இணைக்கும் பாலத்தைத் துண்டித்து விட வேண்டும் என்று ஆலோசனை பரிமாறப்பட்டது.
பிறகு பகல் 11.30 மணி அளவில் தமிழ்நாடு அரசின் கடற்கரை சுற்றுலா தங்கும் விடுதியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அங்கே சமீபத்தில் மத்திய தொல்லியல் துறையால் கர்நாடக மாநிலம் ஹம்பியில் வாழும் மக்களை அப்புறப்படுத்திவிட்டு புல்தரை அமைக்கப்பட்டதைக் குறும்படமாகக் காண்பித்து, அதைப்போன்று மாமல்லபுரத்தில் குடியிருக்கும் மக்களை அப்புறப்படுத்திவிட்டு, மக்கள் இல்லாத மாமல்லபுரம், பசும் புல்தரை போல் காட்சி அளிக்கின்ற வகையில், கணினி வரைகலை முறையில் தயாரிக்கப்பட்ட குறும்படத்தைத் காட்டி இவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.
கி.பி. 1336 முதல் 1565 வரை ஆண்ட விஜயநகர பேரரசால், கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம், துங்கபத்ரா ஆற்றங்கரை ஓரம் 26 சதுர கி.மீ. நிலப்பரப்பில் கட்டி அமைக்கப்பட்ட, சிற்பக்கலைத் தொகுப்பு நகரம் ஹம்பி, பெங்களுரில் இருந்து 375 கி.மீ. தொலைவில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதி என்பதால் மக்கள் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு தேடி பெரிய நகரங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர்.
தற்போது அங்கே சில நூறு நில உடைமை விவசாயக் குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி, பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், உள்ளூர் சுற்றுலாப் பயணிகளே செல்லாத இடம் என்ற நிலையில், வரலாற்று ஆய்வாளர்கள் மட்டுமே அங்கே சென்று வருகின்றனர். ஆனால் பல்லவப் பேரரசின் துறைமுகப்பட்டினமான மாமல்லபுரம், தலைநகர் சென்னையின் உடனடி புறநகர்ப் பகுதி; 3 ச.கி.மீ. நிலப்பரப்பில் அமைந்து உள்ள சிற்பக்கலைத் தொகுப்பு நகரம்; 20 ஆயிரம் மக்கள் வாழும் பகுதி.
நாள்தோறும் பல்லாயிரக்கணக்கில் வெளிநாடு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சுற்றுலா நகரம். எனவே, ஹம்பி, மாமல்லபுரம் என இரண்டு நகரங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அதிகாரிகள் உணர வேண்டும்.
மாமல்லபுரம் கலைச் சின்னங்களின் காப்பாளர்கள் மாதச் சம்பளம் வாங்காத உள்ளூர் மக்களே. அவர்களின் வாழ்வு உரிமை, வழிபாட்டு உரிமை பாதிக்காத வகையிலும், சுற்றுலாப் பயணிகளின் நலன் பாதிக்காத வகையிலும் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தொகுதி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களோ, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளோ பங்கேற்கவில்லை. இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன? அதிகாரவர்க்கம் தாங்களே தீர்மானித்துக் கொள்வதா? இக்கூட்டம் மாநில அரசின் ஒப்புதலின் பேரில் நடைபெற்றதா?
மாமல்லபுரத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், பல ஆண்டுகளாக முழுமை பெறாமல் மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பது ஏன்?
மாமல்லபுரம் புதிய பேருந்து நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இரட்டைக்குட்டைப் பகுதியில் குடியிருந்த குடும்பங்களை அச்சுறுத்தி, முன் அறிவிப்பு ஏதும் இன்றி அவகாசம் இல்லாமல், மக்களின் வேண்டுகோளைப் புறக்கணித்து, அவர்களின் வீடுகளை இயந்திரத்தின் மூலமாக இடித்துத் தரைமட்டமாக ஆக்கி, குடிசைகளைப் பிய்த்து எறிந்து கையகப்படுத்தப்பட்ட இடத்தில், இன்று வரையிலும் பேருந்து நிலையப் பணிகளைத் துவக்காதது ஏன்?
சுற்றுலா நகரங்களுக்குத் தடை இல்லா மின்சாரம் வழங்கப்படும் என்ற மாநில அரசின் வாக்குறுதி, மாமல்லபுரத்தில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தமிழக அரசின் நாட்டிய விழா நடந்த ஒரு மாதம் மட்டும் மின்வெட்டு இல்லாமல் இருந்தது. நாடகம் முடிந்ததும் வேடத்தைக் கலைப்பதைப் போன்று, அரசு விழா முடிந்த மறுநாளே மின்வெட்டு அமலுக்கு வந்துவிட்டது. எனவே, வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தை விட்டு வெளியேறத் துவங்கிவிட்டனர்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் சுற்றுச்சுவரை ஒட்டி அமைந்து உள்ள மாமல்லபுரம், இருளில் மூழ்கி இருப்பது வெட்கக்கேடு. இதன் மூலம் அணுஉலையில் தயாரிக்கப்படுவது மின்சாரம் மட்டும்தானா? என்ற கேள்வி எழுகிறது.
மாமல்லபுரத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு இடையூறாக, புதிய மின் இணைப்பு பெறுவதற்கு உள்ள தடையை நீக்கிட வேண்டும்.
மக்களை அப்புறப்படுத்திவிட்டு மாமல்லபுரத்தை விழுங்கத் துடிக்கும் மத்தியத் தொல்லியல் துறையின் தன்னிச்சையான மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு, மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தமிழக அரசு கடிவாளம் போட வேண்டும்.
மாமல்லபுரத்தைப் பாதுகாக்க கட்சி, சாதி, மத எல்லைகளைக் கடந்து, மக்கள் தொடர்ந்து ஒற்றுமையுடன் போராட வேண்டும். அதற்கு மறுமலர்ச்சி திமுக துணை நிற்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications