மத்திய அரசின் தவறான கொள்கைகளை எதிர்க்கும் ஜெ. அரசுக்கு சிஐடியு பாராட்டு
திருச்சி: மத்திய அரசின் தவறான கொள்கைகளை அதிமுக அரசு எதிர்ப்பதை வரவேற்கிறோம் என்று சிஐடியு அகில இந்திய தலைவர் ஏ.கே. பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் சிஐடியு மாநில மாநாட்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்மநாபன் கலந்து கொண்டு பேசியதாவது,
தொழிற்சங்க உரிமை, ஜனநாயக உரிமை, மக்கள் உரிமைக்காகவும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராட, மக்கள் இயக்கமான தொழிற்சங்க இயக்கத்தை கன்னியாகுமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொழிலாளர்களை ஒன்று திரட்டி போராடக் கூடிய திட்டங்களை தீட்டிப் போராடும் மாநாடாக இந்த 12வது மாநாடு அமைந்துள்ளது. சிஐடியு இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்.
தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை ஒன்றுபட்ட போராட்டத்தை, சக்தியை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மத்திய விவாசயத் துறை அமைச்சர் சரத்பவாரின் சொந்த மாநிலத்திலேயே பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
மத்திய அரசின் தவறான கொள்கைகளை மாநில அரசு எதிர்ப்பதை வரவேற்கிறோம். ஆனால் பேசினால் மட்டும் போதாது, மாநிலத்தில் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பாதிக்கப்படும் மக்களுக்கும், போராடும் தொழிலாளர்களுக்கும் உரிமைகளை பெற்றுத்தர வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications
