மருத்துவமனையில் சசி பெருமாள் அனுமதி... இன்று உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக தகவல்
சென்னை கடந்த 33 நாட்களாக மது விலக்கை அமல்படுத்தக் கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்த காந்தியவாதி சசி பெருமாளை போலீஸார் வலுக்கட்டாயமாக உண்ணாவிரத இடத்திலிருந்து அப்புறப்படுத்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இன்று அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடவுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் சேலத்தைச் சேர்ந்த சசிபெருமாள் என்பவர் கடந்த 33 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால் அவரது உடல் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
நேற்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கடந்த இரண்டு நாட்களாக அவர் தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலையில் இருப்பதால், வெளியேறும் சிறுநீரின் அளவு குறைவாக உள்ளது. நாளைக்குள் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்காவிட்டால் உடல்நிலை மோசமாகும் அபாயத்தில் உள்ளது என்று தெரிவித்தனர்
இதையடுத்து அவரை சந்தித்த அரசியல் கட்சித் தலைவர்கள் உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு சசிபெருமாள் மறுத்தார். பின்னர் அவருடன் போராட்டத்தில் பங்கேற்றவர்களே போராட்டத்தை கைவிட வேண்டும். உங்கள் உயிர் எங்களுக்கு முக்கியம். வேறு வகையில் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்றனர். அதற்கும் அவர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அவரது உறவினர்கள் முயற்சி செய்தனர். வலுக்கட்டாயமாக அவரை தூக்க முயன்றனர். அவர் மறுத்து திருப்பி உண்ணாவிரத பலகையில் அமர்ந்தார். உறவினர்கள் சசிபெருமாளை இழுக்க, இவர் அதற்கு மறுப்பு தெரிவித்து மறுபடியும் உள்ளே வர அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது.
இதையடுத்து போலீசார் உள்ளே புகுந்தனர். அவர்கள் சசிபெருமாளை வலுக்கட்டாயமாக ஆம்புலன்சில் ஏற்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவரை திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், சென்னை காந்தி சிலை அருகே திங்கள்கிழமை உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக எழுதிக்காட்டினார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications