ரூ. 52,000 கோடி விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்தில் மாபெரும் ஊழல்: சிஏஜி பரபரப்பு அறிக்கை

கடன் தள்ளுபடியைப் பெற தகுதியுள்ள விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் பலன் போய் சேரவில்லை. பெரும்பாலும் விவசாயக் கடன் பெறுவதற்கே தகுதியற்றவர்கள்தான் கடன் தள்ளுபடியைப் பெற்றுள்ளனர் என்று சிஏஜி கூறியுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை குழு கூறியது. இந்த இழப்பின் உண்மையான அளவு குறித்து சந்தேகங்கள் இருந்தாலும், அதில் முறைகேடு நடந்தது உறுதியாகியுள்ளது.
அதே போல நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலும் ஊழல் நடந்ததை சிஏஜி சுட்டிக் காட்டியது.
இந் நிலையில் நாடு முழுவதும் ரூ.52,000 கோடி அளவுக்கு விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதில் பெருமளவில் ஊழல் நடந்து இருப்பதாக சிஏஜி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் மற்றும் அரசு சார்ந்த நிதி நிறுவனங்கள் விவசாய பணிகளுக்காக கடன் வழங்குகின்றன. கடந்த 2008ம் ஆண்டு விவசாய கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரண திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
இது குறித்து ஆய்வு செய்த மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரண திட்டத்தில் பெரும் அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
2008ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட விவசாயக் கடன் ரத்து மற்றும் கடன் நிவாரண திட்டத்தின்படி, நாடு முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 3.69 லட்சம் சிறு விவசாயிகள் மற்றும் 60 லட்சம் பிற விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.52,516 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
விவசாய கடன் திட்டத்தின் கீழ் பலருக்கு விவசாயம் அல்லாத பிற உபயோகத்துக்கு கடன் வழங்கப்பட்டு, பின்னர் அவர்கள் கடன் தள்ளுபடி சலுகை பெற்றுள்ளனர். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.20.50 கோடியாகும்.
தகுதி இல்லாத பலர் இந்த திட்டத்தின்கீழ் கடன் வாங்கி கடன் தள்ளுபடி பெற்று பலன் அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் கடன் வழங்கிய வங்கிகள் கடன் தள்ளுபடி பெறும் தகுதியுடைய பலரது கடனை தள்ளுபடி செய்யவில்லை.
3,262 விவசாயிகளுக்கு அவர்களுடைய தகுதிக்கு அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் அடைந்த கூடுதல் பலன் தொகை ரூ.13.35 கோடியாகும்.
தகுதியுடைய 1,564 விவசாயிகளுக்கு குறைவாக கடன் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 9 மாநிலங்களில் வழங்கப்பட்ட விவசாய கடன் கணக்குகளில் 9,334 கணக்குகளை தணிக்கை செய்ததில், 1,257 கணக்குகளில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
அதாவது தகுதியுடைய 13.46 சதவீத விவசாயிகளுக்கு கடன் தொகை தள்ளுபடி செய்யப்படவில்லை.
விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 80,299 கணக்குகளை தணிக்கை செய்ததில் 8.5 சதவீத கணக்குகளில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக ரூ.164.60 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு கடன் வழங்கிய வங்கிகள் மற்றும் குறு நிதி நிறுவனங்கள் அதற்காக ஆய்வு கட்டணம், சட்ட ஆலோசனை கட்டணம் உள்ளிட்ட வகைகளுக்காக அரசிடம் இருந்து ரூ.5.33 கோடியை பெற்றுள்ளன. ஆனால், இந்த கட்டணங்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களே தான் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.
விவசாய கடன் வழங்கியது மற்றும் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குகளை ஆய்வு செய்ததில் மொத்தத்தில் 22.32 சதவீத கணக்குகளில் தவறுகள் மற்றும் முறைகேடு நடந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.
விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் நடந்த இந்த தவறுகள், முறைகேடுகள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளன. மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை இந்த திட்டத்தை கண்காணித்து தவறுகள் நடப்பதை தடுத்து நிறுத்த தவறிவிட்டது.
சில இடங்களில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதும் தணிக்கையின் போது தெரிய வந்தது. அந்த தவறை செய்த வங்கிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தணிக்கையாளர்கள் மீது நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று சிஏஜி அறிக்கையில் புட்டுப் புட்டு வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் ஊழல் நடந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications