சேலம் சிறையில் இருந்து ’மாமா’ அட்டாக் பாண்டியுடன் செல்போனில் பேசிய விஜயபாண்டி!
மதுரை: பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விஜயபாண்டி, அங்கிருந்து செல்போனில் மாமா அட்டாக் பாண்டியுடன் பேசியிருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
மதுரையில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் கொல்லப்பட்டு மாதங்கள் ஓடிவிட்டன. இந்தக் கொலையில் மற்றொரு திமுக பிரமுகரான அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் முதலில் சரணடைந்தனர். பின்னர் அட்டாக் பாண்டியின் சகோதரி மகன் விஜயபாண்டி உள்ளிட்டோர் சரணடைந்தனர். அட்டாக் பாண்டியோ மாதக் கணக்கில் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விஜயபாண்டி உள்ளிட்டோருக்கு சிறை நிர்வாகமே ஏகபோக வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது. இது ஊடகங்களில் வெளியான உடன் சிறைத்துறை ஏடிஜிபி ஒரு தனிப் படை அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கிறார். இதன்படி தனிப்படையினர் திடீரென விஜயபாண்டியின் அறைக்குள் நுழைந்திருக்கிறது.
அங்கே கால்மேல் கால் போட்டபடி ஜாலியாக செல்போனில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். இதைப் பார்த்து அதிர்ச்சிய அடைந்த தனிப்படை செல்போனை பறிமுதல் செய்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத விஜயபாண்டி போலீசுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். விஜயபாண்டியின் செல்போனை தனிப்படை ஆய்ந்த போது அவர் கடைசியாக மாமா அட்டாக் பாண்டியிடம் இருந்து பேசியிருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் மதுரை சுற்றுவட்டாரத்திலிருந்து பேசியிருப்பதாக செல்போன் டவர்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.
இந்தத் தகவல் உடனே மதுரை போலீசுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் முடுக்கிவிடப்பட்டனர். விஜயபாண்டிக்கு செல்போன் கொடுத்த ‘கருப்பு ஆடு' யார் என்பது பற்றியும் தனிப்படை விசாரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications