சினிமா பாணியில் ஹெலிகாப்டரில் தப்பிய கற்பழிப்பு குற்றவாளி!!
ஜம்மு: விபத்தில் காயமடைந்தோருடன் கலந்து ஹெலிகாப்டர் மூலம் பாலியல் குற்றவாளி தப்பி ஓடிய சம்பவம் ஜம்முவில் நடந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முகம்மது பர்வேஸ் என்பவன் ரோசாரியில் உள்ள மன்சகோட் என்னும் ஊரில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டான். அவனை முதலுதவிக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு பத்து பேரை பலி வாங்கிய, பேருந்து விபத்தில் காயமடைந்த 20 பேரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான் பர்வேஸ்.
இது குறித்து ராஜவ்ரி டி.ஐ.ஜி டானிஷ் ராணா கூறியதாவது, "பாலியல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட பர்வேஸ், முகத்தில் இருந்த் சிறிய காயங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். தவறுதலாக காயமடைந்தோருடன் கலந்த பர்வேஸ், காயமடைந்ததிற்கான இழப்பீடாக ஐயாயிரம் ரூபாயையும் பெற்றுக் கொண்டு, மேல் சிகிச்சைகென ஹெலிகாப்டர் மூலம் ஜம்மு அழைத்துச் செல்லப்பட்டு விட்டான். அங்கிருந்து தனது சொந்த ஊருக்கு தப்பிச் செல்ல முயன்ற போது மன்சகோடில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டான்" என்றார்.
இது குறித்து விசாரணை நடத்த காவல் துறைக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார். எவ்வாறு பர்வேசின் பெயர் காயமடைந்தோர் பட்டியலில் சேர்ந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
"பர்வேசின் பெயரை பெயர் காயமடைந்தோர் பட்டியலில் சேர்ந்தது யார்? அவனை மேல் சிகிச்சைக்காக ஜம்மு அழைத்து செல்லுமாறு கூறிய டாக்டர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்'' என டி.ஐ.ஜி ராணா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
