மத்திய அரசு தமிழகத்தை உதாசீனப்படுத்தி அவமதித்துக் கொண்டிருக்கிறது: வேல்முருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு செயல்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வேலூரில் வரும் 19ம் தேதி வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு மீண்டும் ஒரு 1965ம் ஆண்டு போர்க்களத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது! இப்போது தமிழீழத் தனியரசு அமைக்க பொதுவாக்கெடுப்பு கோரியும் இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நிகழ்த்திய ராஜபக்சே கும்பல் மீது போர்க்குற்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இந்தியாவே தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தமிழக மாணவர்கள் கொந்தளிப்பான உச்சகட்டமான உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் பற்ற வைத்த தீ தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இன்றும் 4வது நாளாக தமிழகத்தில் ஒவ்வொரு கல்லூரியிலும் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் தமிழீழத் தனியரசுக்காக களமாடி வருகின்றனர்! இந்தக் கோரிக்கைக்காக கடந்த 4 நாட்களாக நூற்றுக்கணக்கான மாணவர்கள், வழக்கறிஞர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டப் பேரவையில் ஏற்கனவே மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும் இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மறுவாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்தி சிங்களர்களுக்கு உரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்தத் தீர்மானங்களை இதுநாள் வரை மத்திய அரசு கண்டு கொண்டதே கிடையாது. மாறாக மத்திய அரசு நிதி நிலை அறிக்கையிலே இலங்கைக்கு ரூ. 500 கோடி நிதி உதவி செய்து தமிழகத்தை உதாசீனப்படுத்தி அவமதித்துக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் இந்த பொறுப்பற்ற செயலால் தான் தமிழக மீனவர்களை அன்றாடம் சிறைபிடித்துச் செல்கிறது சிங்கள அரசு! தமிழர்களை மதிக்காத மத்திய அரசின் கொடும்போக்கினால் சிங்களக் கடற்படை தமிழக எல்லைக்குள் நுழைந்து மீனவர்களை சுட்டுக் கொலை செய்து கோரத் தாண்டவமாடி வருகிறது. சிங்களக் காடையர்களின் இந்த கொட்டத்துக்கும் மத்திய அரசு தான் காரணம்!

தமிழகத்தை அவமானப்படுத்துகிற, மத்திய அரசின் உதாசீனப் போக்கு தான் இன்று தமிழகத்தில் பல்லாயிரம் மாணவ, மாணவியர்களின் போர்க் கோலத்துக்கு காரணம்! தமிழக மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் மத்திய அரசின் கள்ள மவுனமே காரணம்!

இதனால் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான பொருளாதாரத் தடை, போர்க் குற்றவாளி ராஜபக்சேவுக்கு எதிராக நடவடிக்கை உள்ளிட்டவற்றை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்பதையும், தமிழக மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு செயல்பட வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வேலூரில் வரும் மார்ச் 19ம் தேதியன்று காலை 11 மணியளவில் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போராட்டத்தில் சாதிமத எல்லைகளைக் கடந்து அனைத்து தமிழ்த் தேசிய மற்றும் மனிதாபிமான சக்திகள் ஓரணியில் ஒன்று திரள வேண்டும் என்று அழைக்கிறோம் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+