கனிமொழி நிரபராதி... சிபிஐ சாட்சி கலைஞர் டிவி அமிர்தம் சாட்சியம்!

கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சிபிஐ தரப்பு சாட்சி என்பதால் அதாவது அரசுத் தரப்பு சாட்சி என்பதால், இவரது சாட்சியத்தால், கனிமொழிக்கு எதிரான வழக்கு பலவீனமாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ கோர்ட்டில் குறுக்கு விசாரணை நடந்தது. அப்போது கனிமொழி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி அமிர்தத்திடம் குறுக்கு விசாரணை செய்தார்.
அப்போது அமிர்தம் கூறுகையில், கலைஞர் டிவியின் தினசரி செயல்பாடுகளில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. கலைஞர் டிவியில் அவர் முழுமையாக ஈடுபடவில்லை.
உண்மையில் கலைஞர் டிவியில் இணைந்து செயல்பட அவருக்கு விருப்பம் இருந்ததில்லை. ஆனால் தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியின் வலியுறுத்தல், வேண்டுகோளின் பேரில்தான் அவர் அதில் இணைந்தார்.
நான் கலைஞர் டிவியில் பணியாற்றிய காலகட்டத்தில் எந்த ஒரு சமயத்திலும், கனிமொழி தொடர்பான எந்த ஒரு பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்றார்.
முன்னதாக அமிர்தத்திடம் கேள்வி கேட்ட ராம்ஜேத்மலானி கூறுகையில், நீங்கள் இதற்கு முன்பு சிபிஐக்கு அளித்த வாக்குமூலத்தில், கலைஞர் டிவியின் தினசரி செயல்பாடுகளில் கனிமொழி பங்கு பெற்றிருந்தார் என்று குறிப்பிட்டிருந்தீர்களா என்று கேட்டார். அதற்கு அமிர்தம் அளித்த பதிலில், எனக்குத் தெரியாமலேயே அப்படிப்பட்ட வார்த்தையைச் சேர்த்துள்ளது சிபிஐ என்றார்.
இதற்கு சிறப்பு அரசு வழக்கறிஞர் யு.யு.லலித் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். அவர் வாதிடுகையில் உறவினரான கனிமொழியைக் காப்பாற்றுவதற்காக பொய்யான தகவலை இங்கு சொல்கிறார் அமிர்தம். அவரது சாட்சியம் பிறழ் சாட்சியமாகும் என்றார். ஆனால் அதற்கு அமிர்தம் மறுப்பு தெரிவித்தார்.
முன்னதாக 2011ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி சிபிஐக்கு அமிர்தம் அளித்த வாக்குமூலத்தின்போது, கலைஞர் டிவி நிறுவனத்தின் நிறுவன இயக்குநர் கனிமொழி கருணாநிதி. இருப்பினும், 2007ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி அவர் ராஜினாமா செய்துவிட்டார். அவர் ஒருபோதும் கலைஞர் டிவி நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளில் பங்கேற்றதில்லை என்று கூறியிருந்தார்.
அமிர்தம் 2010ம் ஆண்டு மே 28ம் தேதி கலைஞர் டிவி இயக்குநராக நியமிக்கப்பட்டார். திமுக தலைவர் கருணாநிதி, அமிர்தத்திற்கு தாய்மாமன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications