சென்னை தொடங்கி குமரி வரை பற்றி எரியும் மாணவர் போராட்டம்... பாடை கட்டியதால் கைது!
சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர்.
சென்னையில் தொடங்கிய போராட்டம் குமரி வரை பரவியுள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள், ஐஐடி மாணவர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள், வேளாண்மைக்கல்லூரி மாணவர்கள், பாலிடெக்னிக், ஐடிஐ என பல கட்டங்களாக மாணவர்கள் போராட்டம் பற்றி பரவியுள்ளது.
உண்ணாவிரதம், சாலை மறியல், ரெயில் மறியல், முற்றுகை போராட்டங்கள் நடத்தி வரும் மாணவர்கள் தற்போது நூதன முறையில் போராட்டத்தை மாற்றியுள்ளனர்.

சென்னையில் பாடை கட்டினர்
சென்னையில் இன்று தமிழக இளைஞர் முன்னணி அமைப்பு சார்பில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை ஆதரிக்க வலியுறுத்தி தீர்மானத்தை ‘பாடைகட்டி' எடுத்து சென்று எரித்தனர். லயோலா கல்லூரி அருகில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இலங்கைக்கு எதிராக கோஷமிட்டபடி சென்ற அவர்களை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம், திருவள்ளுர்
காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம் ராமானுஜர் என்ஜினீயரிங் கல்லூரி, பாலாஜி பாலிடெக்னிக் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்கள் சாலை மறியல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளி ஜெயசூர்யா என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலிலும், பெரியபாளையம் சாம்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர்.

கரூர், பெரம்பலூர்
கரூர் அரசு கலைக்கல்லூரி, ஜெயராம் கலைக்கல்லூரி, கொங்கு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ் நிலையம், தபால் நிலையம் அருகே ராஜபக்சே உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர் ரெயில் நிலையத்திற்கு சென்று ரெயிலை மறித்த 369 மாணவ-மாணவிகளை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூரில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் உண்ணாவிரதம் இருந்தனர். தந்தை ரோவர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் 1200 பேர் உண்ணாவிரதம் இருந்து எதிர்பை தெரிவித்தனர்.பெரம்பலூரில் கல்லூரி மாணவர்ஆனந்த குமார் மொட்டையடித்து எதிர்ப்பை தெரிவித்தார்

திருப்பூர், ஈரோடு
திருப்பூரில் உள்ள தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் சுமார் 500 பேர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்ட அனைத்து கல்லூரி மாணவ சமூகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ரெயில் நிலையத்தில் ஈரோட்டை சேர்ந்த கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 8 பேர் ரெயில் மறியல் செய்து கைதானார்கள்.

விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செந்தில்குமார் நாடார் உள்ளிட்ட சில தனியார் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை, சிவகாசியிலும் கல்லூரி மாணவர்களும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தை பதிவு செய்தனர்.

திண்டுக்கல், பழனியில்
திண்டுக்கல்லில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், ராஜபக்ஷேவின் உருவ பொம்மையை எரித்தனர். பழநி சுப்ரமணியா பொறியியல் கல்லூரி, பழநியாண்டவர் கலைக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரத்தில் போராட்டம்
ராமநாதபுரம் சையது அம்மாள் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். பாம்பனில் ரயில் மறியலில் ஈடுபட்ட 88 பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications