கருணாநிதி மீது குற்றம் சாட்டியதால் அமளி: சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபையில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மாணவர் போராட்டம் குறித்து பல்வேறு கட்சியினர் கொடுத்திருந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெற்றது.
இதில் திமுக உறுப்பினர் கோவி.செழியன் பேசும் போது, ஈழத் தமிழர் பிரச்சனையில் மாணவர்கள் சாலையில் இறங்கி போராடிக் கொண்டு இருக்கிறார்கள். கலை, அறிவியல் கல்லூரி, சட்டக் கல்லூரி மாணவர்கள் தான் போராடுவார்கள். ஆனால் இப்போது தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களும், பொறியியல் கல்லூரி மாணவர்களும் போராடுவதை பார்க்கிறோம் என்று கூறி சில வார்த்தைகளைக் கூறினார்.
இதற்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். 'என்ன பிரச்சனையோ அதை மட்டும் பேசுங்கள்' என்றார்.
மீண்டும் கோவி.செழியன் லயோலா கல்லூரி மாணவர்கள் பற்றி பேச தொடங்கினார். இதற்கு அ.திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரினார்.
இதையடுத்து கோவி.செழியன் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துவிட்டு இன்னொரு உறுப்பினரை பேச அழைத்தார்.
இதற்கு ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எழுந்து நின்று தங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரினர்.
அப்போது சபாநாயகர் தனபால், உங்களுக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. வேறு என்னென்னமோ பேசுகிறீர்கள். விதியை மீறி பேச அனுமதிக்க முடியாது என்றார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுகவினர் கோஷமிட்டனர்.
இதையடுத்து கோவி. செழியனுக்கு மீண்டும் 2 நிமிடம் பேச வாய்ப்பளிப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அதே நேரத்தில் கவனத்தை ஈர்ப்பதை மட்டும் பேசுங்கள். புதிய பிரச்சினை பற்றி பேசக்கூடாது என்றார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் பேசிய கோவி.செழியன் சில வார்த்தைகளை கூறினார். இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தனர்.
அப்போது அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலையிட்டு, செழியன் பேசிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோர அதை மீண்டும் அவை குறிப்பில் இருந்து நீக்கினார் சபாநாயகர்.
இதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சலிட்டனர். ஜெ.அன்பழகன் (திமுக) இருக்கையில் இருந்து வெளியே வந்து பேசினார். அவரை இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் எச்சரித்தார். துரைமுருகன் (திமுக) எழுந்து பாயிண்ட் ஆப் ஆர்டர் முறையில் தனக்கு பேச வாய்ப்பு அளிக்க கேட்டார். ஆனால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
நீங்கள் உட்காரவில்லை என்றால் நான் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என சபாநாயகர் எச்சரித்தார்.
அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து, திமுகவினர் திரும்பத் திரும்ப வேறு திசையில் பிரச்சனையை கொண்டு செல்ல முயற்சிக்கிறீர்கள். அதை தவிர்க்க வேண்டும். எனவே இவர்களுக்கு மீண்டும் பேச வாய்ப்பு அளிக்க வேண்டாம். அடுத்தவருக்கு வாய்ப்பு அளியுங்கள் என்று கூற இன்னொரு உறுப்பினர் பேச அழைக்கப்பட்டார்.
உடனே திமுகவினர் எழுந்து நின்று கூச்சலிட்டபடி பேச வாய்ப்பு கேட்டனர். அப்போது சபாநாயர், கோவி.செழியனுக்கு வாய்ப்பு அளிக்க முடியாது. ஸ்டாலின் பேசலாம் என்றார். இதை ஸ்டாலின் ஏற்க மறுத்தார். எங்கள் கட்சி உறுப்பினரை அவமதித்து விட்டு என்னை பேச அனுமதிப்பது முறையல்ல. அவருக்கு பேச அனுமதி கொடுங்கள் என்றார். இதை சபாநாயகர் ஏற்கவில்லை.
இதைத் தொடர்ந்து ஸ்டாலின் எழுந்து 'எங்கள் உறுப்பினர் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சில வார்த்தைகளை கூறினார். அவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்கி வீட்டீர்கள். அவருக்கு பேச வாய்ப்பு அளிக்காமல் என்னை பேச அழைத்ததற்கு மகிழ்ச்சி. அதற்கு நன்றி. ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுத்து விட்டு, பின்னர் அவருக்கு பேச அனுமதி மறுப்பதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்' என்றார்.
இதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். சிறிது நேரத்தில் வெளிநடப்பு செய்த திமுகவினர் அவைக்குத் திரும்பினர்..
அதன் பிறகு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்து பேசத் தொடங்கி, இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுக ஆட்சியின் போது கருணாநிதி நடந்து கொண்ட விதம் குறித்து விமர்சித்தார்.
இதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல முயன்றார். ஆனால், அனுமதி தரப்படவில்லை. இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் எழுந்து சபாநாயகர் இருக்கை அருகே வந்து மறுப்பு கூற முயன்றனர். அவர்களை இருக்கையில் போய் அமருமாறு சபாநாயகர் கூறினார். திமுகவினர் இருக்கைக்கு செல்லாமல் நின்றிருந்தனர்.
இதையடுத்து அவர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரையும் சபை காவலர்கள் வெளியேற்றினர். வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில், கவன ஈர்ப்பு தீர்மானத்திலும் முதல்வர் வேண்டுமென்றே திட்டமிட்டு திமுகவை கொச்சைப்படுத்தும் வகையிலும், திமுக தலைவர் கருணாநிதியை அவமானப்படுத்தும் வகையிலும் தேவையற்ற கருத்துக்களை அவையில் பதிவு செய்தார்.
ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் நடத்துகின்ற எதிர்ப்புகளை அரசின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் திமுக தலைவரை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதால் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம் என்றார்.












Click it and Unblock the Notifications