2 முறை முதல்வராக இருந்த ஜெ. கச்சத்தீவை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?: கருணாநிதி கேள்வி

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
1974-ம் ஆண்டு இலங்கைக்குக் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதாகவும், அப்போது நான் (கருணாநிதி)தான் முதல்வராக இருந்தேன் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் குற்றம்சாட்டியுள்ளார்.
1974-ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு வழங்க முடிவு எடுத்தபோதே, திமுக பெரும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையும் மீறி சில காரணங்களைச் சொல்லி கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டது.
அப்போதும்கூட கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமை, யாத்திரை செல்லும் உரிமை, மீன் வலைகளைக் காய வைப்பதற்கான உரிமைகள் எல்லாம் தமிழக மீனவர்களுக்கு உண்டு என்று திமுக வலியுறுத்தியதன் காரணமாக இலங்கையுடனான ஒப்பந்தத்தில் அந்த ஷரத்து சேர்க்கப்பட்டது.
ஆனால் நெருக்கடி நிலை காலத்தில் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெற்றபோதுதான் அந்த ஷரத்து நீக்கப்பட்டுவிட்டது. அதற்கும் திமுகவின் பொதுக்குழுவில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினோம்.
அதோடு கச்சத்தீவு ஒப்பந்த கண்டன நாளும் திமுக சார்பில் அப்போது கடைப்பிடிக்கப்பட்டது. அதன் பிறகு ஜெயலலிதா ஒருமுறை விடுத்த அறிக்கையில், "கச்சத்தீவு பிரச்னை என்பது மற்றொரு நாட்டுடனான பிரச்னை. அதை மீட்கக்கூடிய அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது. மாநில முதல்வருக்கு அதிகாரம் இருந்திருந்தால் கச்சத்தீவு அன்றைக்கே மீட்கப்பட்டிருக்கும்' என்று கூறியுள்ளார்.
1991-ல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா கோட்டையில் கொடியேற்றியபோது, "கச்சத்தீவை மீட்பேன்' எனச் சபதமிட்டார். ஆனால் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2001 - 2006 ஆண்டு வரையிலும், அதன் பிறகு தற்போதும் ஆட்சியில் தொடரும் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்டுத் தந்துவிட்டாரா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் கோயிலுக்குச் செல்வதற்குக்கூட அதிமுக ஆட்சியில் வழி காணவில்லை. திமுக ஆட்சியில்தான் அதற்கு வழி பிறந்தது என்றும் கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications