சிவில் சர்வீசஸ் தேர்வு: புதிய முறை வாபஸ்… யு.பி.எஸ்.சி அறிவிப்பு
டெல்லி: மெயின் தேர்வை ஆங்கிலத்திலோ அல்லது ஏதேனும் மாநில மொழியிலோ எழுதலாம். குறைந்தபட்சம் 25 பேர் விரும்பினால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட மாநில மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்ற நிபந்தனை ரத்து செய்யப்படுவதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் எனப்படும் இந்திய குடிமைப்பணிகளுக்கான அதிகாரிகளை தேர்வு செய்ய எழுதப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் புதிய மாற்றங்களை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) கடந்த சிலவாரங்களுக்கு முன்பு அறிவித்தது.
மெயின் தேர்வு எனப்படும் முதன்மை தேர்வில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், மாநில மொழிகளில் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு எதிராகவும் அந்த மாற்றங்கள் அமைந்திருந்தன. இதற்கு பாராளுமன்றத்திலும், நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, அந்த மாற்றங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த 15-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது.
மெயின் தேர்வில் பழைய முறை
இந்நிலையில், மெயின் தேர்வு முறையில் செய்ய திட்டமிட்டு இருந்த மாற்றங்கள் வாபஸ் பெறப்படுவதாக யு.பி.எஸ்.சி. வியாழக்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முறை மாற்றங்கள் வாபஸ் பெறப்படுகின்றன. முன்பு இருந்தது போலவே, ஏதாவது ஒரு இந்திய மொழியிலும், ஆங்கிலத்திலும் தலா ஒரு தகுதி தாள் இடம்பெறும். இந்த தாள்கள், மெட்ரிகுலேசன் மற்றும் அதற்கு சமமான நிலையில் இருக்கும். இவை தகுதி தாள்கள் மட்டுமே. இந்த தாள்களில் பெறப்படும் மதிப்பெண்கள், தரவரிசைக்கு கணக்கிடப்பட மாட்டாது.
கடினமான உரைநடை பகுதியை படித்து புரிந்து கொண்டு, தனது கருத்துகளை தெளிவாகவும், சரியாகவும் விண்ணப்பதாரர் வெளிப்படுத்துகிறாரா என்பதை சோதித்து அறிவதே இந்த தாள்களின் நோக்கம்.
இந்த ஆண்டு மெயின் தேர்வில் இருந்து தலா 300 மதிப்பெண்கள் கொண்ட 2 தகுதி தாள்கள், தலா 250 மதிப்பெண்கள் கொண்ட 5 கட்டாய பொது தாள்கள், 250 மதிப்பெண்கள் கொண்ட ஒரு விருப்ப தாள் ஆகியவை இடம்பெறும்.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும். அதற்கான மதிப்பெண் 275 ஆகும். எனவே, மெயின் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 2,025 ஆகும்.
மாற்றங்கள் ரத்து
இலக்கியத்தை விருப்ப பாடமாக எடுக்க வேண்டுமானால், அந்த மொழி இலக்கிய பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை ரத்து செய்யப்படுகிறது.
மெயின் தேர்வை ஆங்கிலத்திலோ அல்லது ஏதேனும் மாநில மொழியிலோ எழுதலாம். குறைந்தபட்சம் 25 பேர் விரும்பினால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட மாநில மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்ற நிபந்தனை ரத்து செய்யப்படுகிறது.அதே சமயத்தில், சிவில் சர்வீசஸ் முதல்நிலை (பிரிலிமினரி) தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications