வாரிசுகளுக்காக தமிழக அரசியல் கட்சிகள் கொண்டு வந்த 'ப்ளஸ் ஒரு ராஜ்யசபா சீட்' பேரம்!
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளில் 'பிளஸ் ஒரு ராஜ்யசபா சீட்" என்ற பார்முலா தொடர்கதையாக இருந்து வருகிறது.
தமிழக அரசியலில் திமுகவில் அண்ணா காலத்திலேயே தமது மருமகன் முரசொலி மாறனை தேர்தல் களத்தில் கருணாநிதி இறக்கிவிட்டிருந்தார். இருப்பினும் 1970களில் வாரிசு அரசியல் 'கோலோச்சி' இருக்கவில்லை. 1980களில் குடும்ப வாரிசுகளும் அரசியல் வாரிசுகளும் திமுகவிலும் அதிமுகவிலும் தலைகாட்டத் தொடங்கினர். 1990களில் பிறந்த கட்சிகளும் கூட வாரிசுகளுக்காகவே தேர்தல் கூட்டணியைத் தீர்மானித்த சம்பவங்களும் இருக்கின்றன.
தமிழக அரசியல் தலைவர்களின் வாரிசுகளாக வலம் வருபவர்கள் பொதுவாக மக்களிடம் அன்னியப்பட்டவர்களாகவே இருப்பதால் தேர்தலை எதிர்கொள்ள தயங்குகிறவர்களாகத்தான் இருக்கின்றனர். இதனால்தான் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் அனைத்து வகை வாரிசுகளையுமே ராஜ்யசபா கோட்டா மூலம் தேர்வு செய்ய வைத்து அமைச்சர்களாகவும் ஆகிவிடுகின்றனர்.

ஜெயலலிதா
1982ம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுகவில் இணைகிறார் ஜெயலலிதா. 1983ம் ஆண்டு அவருக்கு அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலர் பதவி கொடுக்கப்படுகிறது. அத்துடன் திருச்செந்தூர் இடைத் தேர்தல் பிரச்சாரப் பொறுப்பும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்படுகிறது. அத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுகிறது. இதைத் தொடர்ந்து 1984ம் ஆண்டு தனது அரசியல் வாரிசான ஜெயலலிதாவை ராஜ்யசபா எம்.பியாக்கினார் எம்.ஜி.ஆர். அவரது மறைவுக்குப் பின் அதிமுகவின் தலைவராக மக்களால் முழுமையாக ஏற்கப்பட்டார் ஜெயலலிதா.

வைகோ
அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஜெயலலிதா என்பது வெளிப்படையாக இருந்து வந்தது. ஆனால் திமுகவில் மிகச் சிறந்த பேச்சாளராக அறியப்பட்ட வைகோ 1978ம் ஆண்டு ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் தொடர்ந்து மூன்று முறை ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அவர் திமுகவின் அடுத்த 'தலைவராக' உருவெடுக்கப் போய் தனிக் கட்சி தொடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

அன்புமணி
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட போது தாமோ தமது குடும்பத்தினரோ எந்த ஒரு பதவியிலும் அமர மாட்டோம் என்று உறுதியளித்திருந்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அப்படி பதவிக்கு வந்தால் மரத்தில் கட்டி வைத்து சாட்டையால் எல்லாம் அடிக்கச் சொன்னார்.
ஆனால் பின்னாளில் பாமக எதிர்கொண்ட லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேரமே 'ப்ளஸ் ஒரு ராஜ்யசபா சீட்' என்றாகத்தான் இருந்தது. இந்த 'ப்ளஸ் ஒரு ராஜ்யசபா சீட்' என்ற பார்முலாவை உருவாக்கிய பெருமையும் ராமதாஸுக்கே சேரும். இப்படித்தான் 2004ம் ஆண்டு அன்புமணியை ராஜ்யசபா எம்.பியாக்கி மத்திய அமைச்சராகவும் ஆக்கினார் டாக்டர் ராமதாஸ்.
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியைவிட்டு வெளியேறி ஒரு ராஜ்யசபா சீட் பேரத்துடன் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார் ராமதாஸ். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி எந்த ஒரு தொகுதியிலும் போனியாகாததால் ராஜ்யசபா சீட் கனவு நிறைவேறவில்லை.

ஜி.கே.வாசன்
தமிழக காங்கிரஸ் தலைவராக ஜி.கே. மூப்பனார் இருந்த காலத்தில் அவரது மகன் வாசன் பெரிதாக தலைகாட்டிக் கொள்ளவில்லை. மூப்பனார் மறைவுக்குப் பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். அத்துடன் தாய்க் கட்சியான காங்கிரசுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை இணைத்தார். இதைத் தொடர்ந்து 2002, 2009ம் ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பியாகி அமைச்சராகிவிட்டார்.
தற்போது காங்கிரஸ் கட்சி நிச்சயமாக லோக்சபா தேர்தலில் தோற்றுவிடும் என்பதாலும் தமக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் கிடைக்காது என்பதாலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்க திட்டமிட்டிருக்கிறார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டால் திமுக அல்லது அதிமுகவிடம் 'ப்ளஸ் ஒரு ராஜ்யசபா சீட்' என்ற பார்முலாவில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்திருக்கிறார் வாசன்.

கனிமொழி
திமுகவில் மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரியின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்ததால் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் எப்போது சந்தித்தாலும் கனிமொழிக்கு என்ன பொறுப்பு? ராஜ்யசபா சீட் கொடுத்து விடுவீர்களா என்றே கேட்டுக் கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து 2007ம் ஆண்டு ஜூலை மாதம் கனிமொழி ராஜ்யசபா எம்.பியாக்கப்பட்டார். கனிமொழியின் பதவிக்காலம் முடிவடைவதால் அவர் மீண்டும் ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரேமலதா, சுதீஷ் புதிய வாரிசுகள்..
தமிழக அரசியலில் தலைகாட்டி வரும் புதிய வாரிசுகள்தான் தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ். தொடக்கத்தில் யாருடனும் கூட்டணி இல்லை என்று கூறிவந்தார் விஜய்காந்த்.
ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். தேமுதிகவுக்கு 41 தொகுதிகளை அள்ளிக் கொடுத்தார் ஜெயலலிதா. அனைவரும் வெற்றி பெற்றாலோ அல்லது அதிமுகவின் ஆதரவுடனோ தமது மனைவியை அல்லது மைத்துனரையோ ராஜ்யசபா எம்.பியாக்கிவிடலாம் என காத்திருந்தார். தேர்தலில் 29 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். இதனால் அதிமுக ஆதரவுடன் எப்படியும் மனைவியை அல்லது மைத்துனரை ராஜ்யசபா எம்.பி.யாக்கிவிடலாம் என கனவு கண்டார்.
ஆனால் அதிமுகவுடன் மோதல் ஏற்பட கூட்டணியே உடைந்து போனது. இதனால் மார்க்சிஸ்ட் கட்சி உதவியுடன் இருவரில் ஒருவரை எம்.பியாக்க விஜயகாந்த் கனவு கண்டார். அதற்கும் ஆப்படிக்கும் விதமாக அதிருப்தி அணி ஒன்று உருவானது. தேமுதிகவின் எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டு ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் திமுக ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பியாக்க போராடி வருகிறார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications