வியாசர்பாடியில் 10ம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வீட்டு உரிமையாளர்
சென்னை: வியாசர்பாடியில் வசிக்கும் 10ம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வீட்டு உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
வியாசர்பாடி பிவி காலனி 25வது தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது)(16). 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். கடந்த 15ம் தேதி தனது தோழி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ராணி மாயமானார். இதையடுத்து சரவணன் தனது மகளை பல இடங்களில் தேடியும் பலனில்லை.
அதன் பிறகு அவர் இது குறித்து எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் முதல்வன் தனிப்படை அமைத்து ராணியை தேடினார். இந்நிலையில் ராணி மாயமான நாளில் இருந்து அவர்கள் வாடகைக்கு இருக்கும் வீட்டின் உரிமையாளர் முனியப்பன் என்ற சுரேஷ்(40) என்பவரையும் காணவில்லை என்பது தெரிய வந்தது. சுரேஷ் அதே பகுதியில் டெய்லர் கடை வைத்துள்ளார்.
போலீசார் சுரேஷின் உறவினர்களிடம் விசாரித்தனர். விசாரணையில் ராணியை சுரேஷ் கடத்தியது தெரிய வந்தது. இந்நிலையில் சுரேஷ் ராணியை ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு கடத்திச் சென்று கற்பழித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ராஜமுந்திரி விரைந்தனர். அங்கு ராணியை மீட்டு சுரேஷை கைது செய்து அழைத்து வந்தனர்.
போலீசார் சுரேஷ் மீது கடத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications