மகளிர் பேருந்துகள் 200 ஆக அதிகரிப்பு… மலைப்பகுதிகளில் மினி பஸ்: ஜெ. அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Jaya increases the women's special buses
சென்னையில் சிறுவர்கள் மற்றும் மகளிர் பயணம் செய்யும் பேருந்துகள் 200ஆக அதிகரிக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். அதேபோல் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் வசதிக்காக மினி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்த ஜெயலலிதா கூறியதாவது:

இடைநிற்றல் இன்றி அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தினை நிறைவு செய்யும் வகையில், அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களின் பயனாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

மேலும் தொழில் துறை மற்றும் அறிவியல் துறைகளில் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக தொழில் துறை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களின் எண்ணிக்கையும் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. எனவே, இதனால் ஏற்படும் கூடுதல் போக்குவரத்து தேவையினை நிறைவேற்றும் வகையிலும், அவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவையினை வழங்கிடும் வகையிலும், தற்போது சென்னை பெருநகரத்தில் மகளிர் மற்றும் சிறுவர்களுக்காக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 134 லிருந்து 200 ஆக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பணிமனைகள் அதிகரிப்பு

மாநிலத்திலுள்ள போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் பேருந்துகள் சேவை எவ்வித தொய்வும் இன்றி வழங்கிட பணிமனைகள் மிகவும் அவசியம் ஆகும். பணிமனைகள் அதிக அளவில் இருப்பது பேருந்துகள் பழுதுபடுதலை குறைப்பதுடன் டீசல் செலவையும் குறைப்பதற்கு வழிவகை ஏற்படுத்தும். கடந்த இரண்டு ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் 43 பணிமனைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பல சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த மாமன்றத்தில் பல இடங்களில் பணிமனைகள் அமைக்க வேண்டும் என கோரியுள்ளனர். பணிமனைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஆதம்பாக்கம், குரோம்பேட்டை, பெரம்பூர், குன்றத்தூர், பெரும்பாக்கம், தையூர், கும்மிடிபூண்டி ஆகிய இடங்களிலும்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்தில் செங்கம், எலத்தூர் ஆகிய இடங்களிலும்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தில் ஓமலூர், பள்ளப்பட்டி ஆகிய இடங்களிலும்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோயம்புத்தூர் கோட்டத்தில் சூலூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, பேரூர் ஆகிய இடங்களிலும்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தில் விராலிமலை, உப்பிலியாபுரம், பிராட்டியூர், கரூர், கும்பகோணம், பாளையம் ஆகிய இடங்களிலும்;

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்தில் காரியாப்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களிலும்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி கோட்டத்தில் ஆலங்குளம், சாத்தான்குளம் ஆகிய இடங்களிலும் 25 பணிமனைகள் 22 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக அமைக்கப்படும். இவ்வாறு கூறினார்.

குழு ரிசர்வேசன் சலுகை

முன் பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், குறைந்த பட்சம் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பயணச் சீட்டுகள் முன் பதிவு செய்யும் குழுமப் பயணிகளுக்கு பயணத் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இந்தச் சலுகை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் இச்சலுகை வழங்கப்பட மாட்டாது.

போக்குவரத்து கழக நகர பேருந்துகளில் வழக்கமாக பயணம் செய்யும் பயணிகளுக்கு மாநகர் / நகர பேருந்துகளில் தற்போது மூன்றில் ஒரு பங்கு சலுகைக் கட்டணத்துடன் கூடிய மாதாந்திர பயணச் சீட்டு வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது.

இந்தச் சலுகை புறநகர் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்‘. இது மட்டுமல்லாமல், பயணிகளின் வசதிக்காக புதுப்பிக்கப்படக் கூடிய கையடக்க பயண அட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின்படி பயணிகள் பயணிக்கும் போது அதற்குரிய கட்டணம் பயண அட்டையில் உள்ள தொகையிலிருந்து கழித்துக் கொள்ளப்படும்.

மலைப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு விரைவாக எளிதில் சென்று திரும்பும் வகையில் 35 கோடி ரூபாய் செலவில் 250 சிற்றுந்துகள் (மினி பஸ்) புதியதாக அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+