சொத்தை அனுபவிக்க முடியலையே... தாயைக் கொன்ற 'தறுதலை' தனயன்!
சங்ககிரி: சொத்தையும் அனுபவிக்க முடியவில்லை. உடம்புக்கு முடியாத தாயையும் பார்க்க முடியவில்லை என்று கோபமடைந்த மகன் குடிபோதையில் தனது தாயின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டார்.
சங்ககிரி அருகே உள்ள தேவூர் பொன்னம்பாளையம் அத்திமரக்காடு பகுதியை சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (65). இவருக்கு பழனிச்சாமி என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இதில் ஒரு மகள் இறந்து விட்டார். மற்றொரு மகள் கணவரை இழந்து வசித்து வருகிறார்.
மேலும் வெள்ளையம்மாள் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக கிடந்தார். கடந்த சில மாதங்களாக வெள்ளையம்மாளை அவரது மகள் பார்த்துக் கொண்டார். பின்னர் அவரால் முடியவில்லை என்று கூறி மகன் பழனிச்சாமி வீட்டிலேயே கொண்டு வந்து விட்டு சென்றார்.
பழனிச்சாமியும், அவரது மனைவியும் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் வேலைக்கு சென்று விட்டு வந்து தினமும் வெள்ளையம்மாளை கவனித்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பழனிச்சாமியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் பழனிச்சாமி தனியாக தனது தாய் வெள்ளையம்மாளுக்கு பணிவிடை செய்து வந்தார். தனியாக தனது தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக இதேபோல் இருப்பதால் சொத்தையும் அனுபவிக்க முடியவில்லை என்று கருதிய பழனிச்சாமி நேற்று மாலை தனது தாயை குடிபோதையில் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் இறந்து விட்டார்.
பின்னர் பழனிச்சாமி தன் தந்தை கல்லறை அருகே குழி தோண்டி வைத்து தன் தாயை அங்கே அடக்கம் செய்வதற்காக தோளில் தூக்கி சென்றார். இதைப்பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து தேவூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சங்ககிரி இன்ஸ்பெக்டர் வேலுதேவன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த பழனிச்சாமி பிணத்தை போட்டு விட்டு அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கி கொண்டார். பின்னர் போலீசார் நீண்டநேர போராட்டத்துக்கு பின்னர் பழனிசாமியை பிடித்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications