தஞ்சைக்கு குருப்பெயர்ச்சி சுற்றுலா: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு
சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் குருப்பெயர்ச்சி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குரு பார்க்க கோடி நன்மை. குரு என்றால் இருளை நீக்குபவர் என்று பொருள். மெய்யுணர்வுக்கும், ஆத்ம சிந்தனைக்கும் உரியவர். முழுமையான உடல், மன ரீதியான வளர்ச்சி அளிப்பவர்.
வழிகாட்டி, மூலைக்கு அதிபதி, தன்னறிவு, விவேகத்துக்கும், வித்தைக்கும், விழிப்புணர்ச்சிக்கும் உரியவர். மனித உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் ஒழுங்குபடுத்தி சீராக இயங்கச் செய்பவர் குரு பகவான் ஆவார். ஒன்றில் வெற்றி பெறுவதற்கும் இவர் தயவு தேவை. எதிர் காலத்தைப் பற்றி கவலையை போக்குவார்.
சபரி சுத்த திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் இந்த வருட குருப்பெயர்ச்சி 30.5.2013 விஜய வருடம் வைகாசி 16 ஆம் நாள் மதியம் 3.55க்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு மாறுகிறார். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 28.5.2013 இரவு 9 மணியளவில் பெயர்ச்சியாகிறார்.
இது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திட்டை, ஆலங்குடி ஆகிய ஊர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து மே 28ம் தேதி இரவு 8 மணிக்கு புறப்படும் பேருந்து 29ம் தேதி காலை 7 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும். சுவாமி வழிப்பாட்டிற்கு பிறகு அங்கிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு அன்றிரவு 9 மணிக்கு சென்னை வந்தடையும்.
குளிர்சாதன பேருந்து போக்குவரத்து, உணவு, வழிகாட்டி உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கிய இந்த பயணத்திற்கு ஒருவருக்கு ரூ. 1,750 கட்டணாமாக வசூல் செய்யப்படுகின்றது.
இந்த பயணம் குறித்தும், மேலும் அதிக தகவல் பெறவும், முன்பதிவு செய்யவும், 044 - 2538 3333, 2538 9857, 2538 4356, 2538 2916 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications