பணம், நகை மோசடி: போலி மதபோதகர்கள் மீது வழக்கு
நெல்லை: வாசுதேவநல்லூர் அருகே ஜெபம் செய்து இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மோசடி செய்த போலி மதபோதகர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசுதேவநல்லூரை அடுத்த சங்கனாப்பேரி வடக்கு தெருவைச் சேர்ந்த ராமராஜ், அவரது மகன் ஜெயபிரபு(38) ஆகியோர் மதபோதகர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி மாரியம்மாளிடம்(38) தங்களை மத போதகர் என அறிமுகம் செய்ததோடு, தங்களிடம் நகை மற்றும் பணத்தை கொடுத்தால் 3 மாதத்திற்கு பின் இரட்டிப்பாக தருவதாக கூறினர். இதனை உண்மை என நம்பிய மாரியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ. 5 லட்சம் ரொக்கம், 40 பவுன் தங்க நகையை மத போதகர்களிடம் கொடுத்தனர்.
மாரியம்மாளிடருந்து பணம் மற்றும் நகையை பெற்ற மத போதகர்கள் வீட்டிற்கு கொண்டு சென்று ஜெபம் செய்து இரட்டிப்பாக்கி தருவதாக கூறி சென்றனர். இதற்கிடையே 5 மாதங்களாகியும் மத போதகர்கள் பணம் மற்றும் நகையை மாரியம்மாளிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. மாரியம்மாள் மத போதகர்களை சந்தித்து நகை மற்றும் பணத்தை திருப்பிக் கேட்டார். அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததோடு, பணம் மற்றும் நகையை கொடுக்காமல் இழுத்தடித்தனர். இதனால் ஏமாற்றமடைந்த மாரியம்மாளும், அவரது கணவரும் வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தனர். அவர்களின் புகாரின் பேரில் வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) இளஞ்செழியன் மற்றும் போலீசார் ராமராஜ், ஜெயபிரபு ஆகியோர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்ததை அறிந்த ராமராஜும், ஜெயபிரபுவும் தலைமறைவாகிவிட்டனர். வாசுதேவநல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில் மத போதகர்கள் இருவரும் பல பேரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே இவர்கள் இருவரும் சங்கனாப்பேரி சுப்பிரமணியத்திடம் 24 பவுன் நகை மற்றும் 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், ஏமன்பட்டி சண்முகத்தாயிடம் 20
பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாயும் மோசடி செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் கடந்த 3
மாதங்களுக்கு முன் ராமாராஜ், ஜெயபிரபு ஆகியோரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications