ஸ்பெக்ட்ரம் உரிமம்... ஸ்வான் தகுதியற்றது... அது ரிலையன்சுக்கு சொந்தமானது- நீரா ராடியா சாட்சியம்!

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியாக நீரா ராடியா சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, நீரா ராடியா கடந்த ஆண்டு டிசம்பர் 5ந் தேதியே சாட்சியம் அளிப்பதாக இருந்தது. ஆனால் நரம்பியல் தொடர்பான அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியிருப்பதால் சாட்சியம் அளிப்பதற்கு 3 மாத கால அவகாசம் கோரியிருந்தார். இதையடுத்து சாட்சியம் அளிப்பது ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், மே மாத முதல் வாரத்தில் நீதிபதி ஓ.பி. சைனியிடம் சாட்சிகளின் பட்டியலை சிபிஐ வழங்கி இருந்தது. இதன்படி, 28ந் தேதி நீரா ராடியாவின் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும். இதனால் இன்று நீரா ராடியா நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது அவர், ஸ்பெக்ட்ரம் உரிமத்தைப் பெறுவதற்கு ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு தகுதி இல்லை. அந்த நிறுவனம் அது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் ஏடிஏஜி நிறுவனத்தைச் சேர்ந்ததுதான். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வ்ழங்கப்பட்ட போது ஊடகங்களால் தகுதியான நிறுவனமா? இல்லையா? என்று பெரும் விவாதம் நடத்தப்பட்டது. அந்த விவாதங்கள் மூலமாகவும் டாடா குழு வழக்கறிஞர்கள் மூலமாகவும் ஸ்வான் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற தகுதியற்றது என்பதை தெரிந்து கொண்டேன். ஆனால் எனக்கு தனிப்பட்ட வகையில் உறுதிப்படுத்தும் தகவல் எதுவும் இதுகுறித்து கிடைக்கப்பெறவில்லை. 2007ஆம் ஆண்டு டாடா குழுமத்தின் டாடா டெலிசெர்வீசஸ் நிறுவனம் டூயல் டெக்னாலஜி உரிமம் பெறுவதற்காக விண்ணபிக்குமாறு எனது நிறுவனம் அறிவுத்தல் கொடுத்தது என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து அவரிடம் மீண்டும் ஜூலை 2-ந் தேதி நீரா ராடியா சாட்சியம் அளிக்க இருக்கிறார். மேலும் இந்த வழக்கில் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய டேப்புகளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்வான் - கலைஞர் டிவி தொடர்பு
ஸ்வான் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் கொடுப்பதற்காகத்தான் கலைஞர் டிவி 200 கோடி ரூபாய் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதில்தான் ஆ.ராசா, கனிமொழி, ஷரத், ஸ்வானின் ஷாகித் பல்வா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது ஸ்வான் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் உரிமம் தகுதி இல்லாததுதான் என்று அரசியல் தரகர் நீரா ராடியா கூறியிருப்பது கலைஞர் டிவி தரப்புக்கு மேலும் ஒரு நெருக்கடியாகவே கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications