ஸ்பெக்ட்ரம் வழக்கு: அனில் அம்பானி, மனைவி டினா சாட்சியமளிக்க சிபிஐ நீதிமன்றம் சம்மன்!

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முக்கிய அரசு தரப்பு சாட்சியாக அரசியல் இடைத்தரகர் நீரா ராடியா சாட்சியமளித்திருந்தார். இந்நிலையில் மேலும் 70 பேரை சாட்சிகளாக சேர்க்க சிபிஐ முடிவு செய்துள்ளது. இதில் தொழில் அதிபர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா ஆகியோரது பெயரும் இடம்பெற்றுள்ளது.
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஈடுபட்டதாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த ஹசித் சுக்லா தற்போது சிபிஐ சாட்சியாக உள்ளார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் சாட்சியம் அளித்த போது ஏஏஏ கன்சல்டன்சி நிறுவனத்தின் ஆவணத்தில் கையெழுத்திட்டு இருப்பது அனில் அம்பானியும் அவரது மனைவி டினாவும் என்று கூறியிருந்தார்.
இந்த ஏஏஏ கன்சல்டன்சி மூலம்தான் ஸ்வான் டெலிகாமிடம் இருந்து ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றது. இது தொடர்பாக அனில் அம்பானியிடம் விளக்கம் பெற சிபிஐ முடிவு செய்தது.. இந்நிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் அனில் அம்பானி உட்பட 16 பேர் சாட்சியமளிக்க கோரி இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்று அனில் அம்பானி, அவரது மனைவி டினா உள்ளிட்ட 16 பேர் சாட்சியமளிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications