ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்தார் அத்வானி

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பிரசாரக் குழுத் தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த பாஜக மூத்த தலைவர் அத்வானி திடீரென தமது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்தார். இதனால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் தலையிட்டு அத்வானியின் ராஜினாமாவை வாபஸ் பெற வைத்தார்.
இதைத் தொடர்ந்து டெல்லிக்கு வந்திருந்த நரேந்திர மோடி வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பேசினார்.பின்னர் நேற்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத், அத்வானியை சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அத்வானிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அச்சந்திப்பு நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்குச் சென்ற அத்வானி, மோகன் பகவத்தை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது பாஜகவில் எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் பற்றி இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications