உயிருக்குப் போராடும் மண்டேலாவுக்கு ‘அஞ்சலி’ செலுத்திய குஜராத் காங்கிரஸ்!
அகமதாபாத்: தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா இன்னமும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் நிலையில் குஜராத் மாநில காங்கிரஸோ அவருக்கு "அஞ்சலி" செலுத்தியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதால் அவருக்காகப் பிரார்த்திக்குமாறு தென்னாப்பிரிக்கா அரசு வேண்டுகோள் விடுத்து வருகிறது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குஜராத் மாநில காங்கிரஸ் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியானது; அதில் காங்கிரஸ் தலைவர்கள் அர்ஜூன் மோத்வாடியா, சங்கர்சிங் வகேலா ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர். அதில், நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இருப்பினும் குஜராத் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், தவறு நடந்துவிட்டது உண்மைதான். இணையதளம் ஒன்றில் இருந்து எடுத்த செய்தியின் அடிப்படையில் அந்த பிரஸ் ரிலீஸ் வெளியிடப்பட்டது என்று விளக்கம் அளித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications
