உத்தரகண்ட் வெள்ள செய்தியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான கணவரை கண்டுபிடித்த பெண்
ஹைதராபாத்: உத்தரகண்ட் வெள்ளச் சேதம் மற்றும் திருட்டு குறித்த செய்தியைப் பார்த்து 13 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான தனது கணவரை ஆந்திர பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி நூற்றுக் கணக்கானோர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை தெரியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு உத்தரகண்ட் செய்தி மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் லக்டபாடு கிராமத்தைச் சேர்ந்த சின்ன வெங்கடேஸ்வரலு என்பவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திடீர் என்று மாயமானார். இதையடுத்து அவரது மனைவி தனக்கு சொந்தமான வயலில் விவசாயம் செய்து தனது 2 மகள்களையும் வளர்த்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் உத்தரகண்ட் வெள்ளத்தில் சாமியார் ஒருவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 45,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட செய்தி ஆந்திர பத்திரிக்கையில் புகைப்படத்துடன் வந்தது. அதைப் பார்த்த வெங்கடேஸ்வரலுவின் மனைவிக்கு எல்லையில்லா சந்தோஷம் ஏற்பட்டது. காரணம் அந்த சாமியார் வேறு யாருமில்லை 13 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான தனது கணவர் என்பதால் தான்.
உடனே அவர் அந்த பத்திரிக்கை அலுவலகத்தை தொடர்பு கொண்டார். மேலும் கீர்த்தி நகர் காவல் நிலையத்தில் தனது கணவரை மீட்டுத் தரக் கோரி மனு அளித்தார். இந்நிலையில் வெங்கடேஸ்வரலுவை அழைத்து வர அவரது உறவினர்கள் உத்தரகண்ட் செல்லவிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications