கிருஷ்ணகிரி: பள்ளி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 தொலைக்காட்சி நிருபர்கள் கைது
கிருஷ்ணகிரி: செய்தி போடாமல் இருக்கவேண்டுமெனில் பணம் தரவேண்டும் என்று பள்ளி நிர்வாகியை மிரட்டிய தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த நாயக்கனூரை சேர்ந்தவர் வடிவேல் (34). இவர் பாப்பிரெட்டிப்பட்டி தனியார் டிவி நிருபராக பணிபுரிகிறார். சிவக்குமார் (34) என்பவர் மற்றொரு தனியார் டிவி கேமராமேனாக பணிபுரிகிறார்.
இவர்கள் இருவரும் கடந்த 4ம் தேதி தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி உண்டு, உறைவிடப்பள்ளிக்கு சென்று பி.டி.ஏ. தலைவர் கருணாகரனிடம், "உங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியை அடித்ததில், மாணவி தற்கொலை முயற்சி செய்துள்ளார். ந்த சம்பவம் செய்தியாக, டிவியில் வராமல் இருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். கருணாகரன் தன்னிடம் பணம் இல்லை என கூறியதோடு, 500 ரூபாய் கொடுத்துள்ளார்.
பணம் கேட்டு மிரட்டியதை மொபைல்ஃபோனில் ரிக்கார்டு செய்துள்ளார் கருணாகரன்.
இதை தெரிந்து கொண்ட வடிவேலும், சிவக்குமாரும், பள்ளி நிர்வாகியின் மொபைல்ஃபோனை பறித்து, அதில் பதிவான தங்கள் பேச்சுக்களை அழித்தனர். பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
இது குறித்து, கருணாகரன் நேற்று அரூர் போலீஸில் புகார் செய்ததை அடுத்து இரண்டு நிருபர்களையும் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications