சொத்து குவிப்பு வழக்கு: முலாயம், மகன்களை விடுவிக்கிறது சிபிஐ
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக கூறப்பட்ட வழக்கில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் மற்றும் அவரது மகன்களை குற்றமற்றவர்கள் என விடுவிக்க சிபிஐ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று விஸ்வநாத் சதுர்வேதி என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2007ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. கடந்த 6 ஆண்டுகாலமாக நடைபெற்ற இந்த வழக்கில் விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
இந்த விசாரணை அறிக்கையில் அனேகமாக முலாயம்சிங் மற்றும் அவரது மகன்களை சிபிஐ விடுவிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் சிபிஐ அந்த அறிக்கையில் கூற இருக்கிறதாம்.. இதனால் முலாயம்சிங் குடும்பத்தினர் நிம்மதியடைந்துள்ளனர்.
இருப்பினும் மத்திய அரசின் மிக முக்கியமான உணவு பாதுகாப்பு அவசர சட்டத்தை ஆதரிப்பதாக முலாயம்சிங் அறிவித்ததற்கு பிரதிபலனாகவே சிபிஐ மூலம் அவரை காப்பாற்றுகிறது காங்கிரஸ் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications