உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவா?- ஜெ. புகாருக்கு கருணாநிதி மறுப்பு!
சென்னை: உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு திமுக ஆதரவாக இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதை திமுக தலைவர் கருணாநிதி நிராகரித்துள்ளார். மேலும் இது தொடர்பாக திமுக எம்.பி. இளங்கோவன் தன்னிச்சையாக முந்திக் கொண்டு பேட்டி கொடுத்ததை தாம் ஏற்கவில்லை.. என்றும் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், உணவு பாதுகாப்பு மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்து விட்டதாகவும், துரோகம் செய்து விட்டதாகவும் ஒரு முதலமைச்சரே பொறுப்பற்ற முறையில் குற்றம் சாட்டுவது சரிதானா?

இளங்கோவன் மட்டுமே பிரதிநிதியா?
மேலும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான டி.கே.எஸ். இளங்கோவன் இந்த மசோதாவை ஆதரித்துக் கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன என்று தன் அறிக்கையிலே ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார். டி.கே.எஸ். இளங்கோவன் தான் தி.மு.கழகத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியா? அவர் நாடாளுமன்றக் கழகக் குழுவின் தலைவரா? அவர் கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன என்கிறாரே முதலமைச்சர் எந்தெந்த பத்திரிகைகளில் அவருடைய பேட்டி வந்திருக்கிறது?

பேட்டியை அப்படியே மறைப்பதா?
அதைப்பற்றி நான் விசாரித்த வரையில் ஒரே ஒரு நாளிதழில் மட்டுமே செய்தி வெளிவந்ததாகவும், அதிலும், தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை முன்மாதிரியாகக் கொண்டு புதிய சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டு வரலாம். தற்போது இந்தச் சட்டம் குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது" என்றும் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாக வந்துள்ள செய்தியை அப்படியே மறைத்து விட்டு, அவருடைய ஒரு பாதிப் பேட்டியை மட்டும் குறிப்பிட்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தி.மு.க. ஆதரிக்கும் என்று டி.கே.எஸ். இளங்கோவன் மூலமாக கருணாநிதி சொல்ல வைத்திருக்கிறார் என்று ஜெயலலிதா அறிக்கையிலே கூறியிருப்பது எவ்வளவு அநாகரிகமான செயல்?

இளங்கோவன் பேட்டியை ஏற்கவில்லை
டி.கே.எஸ். இளங்கோவன் கூடத் தன்னிச்சையாக இப்படியொரு பேட்டியைக் கொடுத்ததை நான் ஏற்கவில்லை. அப்படி அவர் என்னையும் முந்திக் கொண்டு, பேட்டி கொடுத்ததால்தான் தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா, நான் தான் இளங்கோவனைத் தூண்டிவிட்டு செய்தி அளிக்கச் சொன்னதைப் போல ஒரு அபாண்டமான அறிக்கை கொடுத்திருக்கிறார். இது தேவை தானா?

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
செய்தியாளர்களைச் சந்திக்கும் கழகத்தைச் சேர்ந்த ஏனைய முன்னணியினரும் கூட இது போன்ற விஷயங்களில் வருங்காலங்களில் கவனமாகவும், முன்னெச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். இல்லையேல் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி












Click it and Unblock the Notifications