தொழில் போட்டி: ஈஞ்சம்பாக்கத்தில் வடமாநில தொழில் அதிபர் மகன் துப்பாக்கிமுனையில் கடத்தல்
சென்னை: தொழில் போட்டி காரணமாக சென்னையில் தங்கியிருந்த வடமாநில தொழிலதிபரின் மகனை துப்பாக்கி முனையில் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை அனுமன் காலனி 1-வது தெருவை சேர்ந்தவர் பங்கஜ்குமார் பிகாரி (வயது 26). இவரது சொந்த ஊர் பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டம் ஆகும். இவரது தந்தை அகோரி பிரசாத் யாதவ் அங்கு தொழில் அதிபராக உள்ளார்.
பங்கஜ்குமார் சோழிங்க நல்லூரில் உள்ள தனியார் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். தற்போது வட மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களை கல்லூரியில் சேர்த்துவிட்டு அதற்காக கமிஷன் பெற்று வந்தார். இதற்காக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். அவருடன் தற்போது அதே கல்லூரியில் படிக்கும் 5 மாணவர்களும் தங்கி இருந்தனர்.
அதேபோல் கொட்டிவாக்கத்தில் வசித்து வரும் ஒரு கும்பலும் மாணவர்களுக்கு இடம் வாங்கி கொடுத்து கமிஷன் பெறும் வேலையை செய்து வந்தனர். இந்த தொழில் போட்டியில் பங்கஜ்குமாருக்கும் அந்த கும்பலுக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பங்கஜ்குமாரை அடிக்கடி மிரட்டி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பங்கஜ்குமாரும், 5 மாணவர்களும் அறையில் தங்கி இருந்தனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் 15 பேர் கொண்ட கும்பல் 2 கார்களில் அங்கு வந்தது. அவர்கள் கதவை தட்டினர். பங்கஜ்குமார் கதவை திறந்தார்.
அப்போது அந்த கும்பல் கத்தியால் பங்கஜ்குமாரை தலையில் வெட்டினார்கள். இதில் அங்கிருந்த படுக்கை முழுவதும் ரத்தம் சிந்தியது. அவர் மயங்கி விழுந்தார்.
பின்னர் அங்கிருந்த மாணவர்களை துப்பாக் கியை காட்டி அந்த கும்பல் மிரட்டியது. 5 மாணவர்களையும் 2 அறைகளில் தள்ளி பூட்டி விட்டு துப்பாக்கி முனையில் பங்கஜ்குமாரை கடத்தி சென்றனர்.
5 மாணவர்களும் கத்தி கூச்சல் போட்டனர். அந்த பகுதியில் வசித்தவர்கள் பூட்டை உடைத்து 5 பேரையும் மீட்டனர். இதுபற்றி நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது.
இணை கமிஷனர் திருஞானம், அடையாறு துணை கமிஷனர் பெரோஸ் கான் அப்துல்லா, நீலாங்கரை உதவி கமிஷனர் உமா சங்கர், இன்ஸ்பெக்டர் புகழேந்தி, கானாத்தூர் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி உள்பட 30 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு பங்கஜ் குமாரை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
தாம்பரம், சோழிங்க நல்லூர், மாமல்லபுரம், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல இடங்களுக்கும் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். கடத்தல் கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கிழக்குக் கடற்கரை சாலை பகுதியில் தங்கி பயிலும் பீகார் மாணவர்கள் பலர் சர்வ சாதாரணமாக துப்பாக்கி வைத்துள்ளனர். இது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஈஞ்சம் பாக்கம் பகுதியில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இதே போல் பீகாரை சேர்ந்த கும்பல் ஒரு வாலிபரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது. அப்போது போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த வாலிபரை மீட்டு 2 பேரை துப்பாக்கியுடன் கைது செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications