ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவது ஏன்?: 'பூமராங்' ஆன மத்திய அரசின் நடவடிக்கைகள்!
மும்பை: இந்தியாவில் இருந்து டாலர்கள் வெளியேறுவதைத் தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பூமராங் ஆகியுள்ளன. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பு படுபாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது.
இரு மாதங்களுக்கு முன் அமெரிக்க தனியார் நிறுவனங்களுக்குத் தரும் நிதியுதவியை அமெரிக்க அரசு நிறுத்தியது. அந்த முதலீடுகளைத் திரும்ப எடுக்க ஆரம்பித்தது. இதையடுத்து அந் நாட்டு அரசின் பங்குகளின் மதிப்பு அதிகரித்தது. இதையடுத்து உலகம் முழுவதும் இருந்தும் முதலீட்டாளர்கள் அமெரிக்க அரசின் பங்குகளின் நிதியை முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்த தங்களது முதலீடுகளை (டாலர்கள்) திரும்பப் பெற்று அதை அமெரிக்காவுக்குத் திருப்பி விட ஆரம்பித்துள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளில் இருந்த முதலீடுகள் கரைந்து வருகின்றன. குறிப்பாக இந்தியப் பொருளாதாராம் தள்ளாட்டத்தில் இருப்பதால், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருந்த பெரும் முதலீட்டாளர்கள் அதை வேகமாக வெளியே எடுக்க ஆரம்பித்தனர்.
இந்தக் காரணத்தால் டாலருக்கு இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மடமடவென சரிய ஆரம்பித்தது. இதைத் தடுக்க மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் சில நடவடிக்கைகளை எடுத்தன. சந்தையில் புழக்கத்தில் இருந்த ரூபாயின் அளவைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்கின. இந்திய வங்கிகளுக்கு தரும் பணத்துக்கான வட்டியை ரிசர்வ் வங்கி அதிகரித்தது. இதனால் வங்கிகள் கடன் கொடுப்பதை குறைத்துக் கொண்டுவிட்டன. மேலும் கடனுக்கான வட்டியையும் அதிகரித்தன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் சந்தையில் பணப் புழக்கம் குறைந்தாலும் மக்களுக்கு கடன் கிடைப்பதும் சேர்த்து குறைந்துவிட்டது. இதனால் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து போய் உற்பத்தித் துறை, சேவைத் துறை உள்ளிட்ட தொழில்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
இந் நிலையில் தனியார் நிறுவனங்களுக்குத் தரும் நிதி உதவியை மேலும் குறைக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அமெரிக்க அரசுப் பங்குகளில் முதலீடு செய்யும் ஆர்வம் உலகளவில் முதலீட்டாளர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து மீண்டும் டாலர்கள் வேகமாக இந்திய பங்குச் சந்தைகளை விட்டு வெளியேறுவதைத் தடுக்க மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் சில நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தன.
குறிப்பாக, இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதே போல இந்தியர்கள் ஆண்டுக்கு 2 லட்சம் டாலர் வரை வெளிநாடுகளுக்கு அனுப்பலாம் என்று இருந்த விதியைத் திருத்தி அதை 75,000 டாலராகவும் ரிசர்வ் வங்கி குறைத்தது. இதனால் டாலர்கள் வெளியேறுவதைத் தடுக்க முடியும் என மத்திய அரசு கருதியது.
இந் நிலையில் தாங்கள் முதலீடு செய்த டாலர்களை பங்குச் சந்தைகளில் இருந்து திருப்பி எடுத்த இந்திய அரசு மேலும் பல கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக கடந்த இரு நாட்களாக புரளி பரவியது. அரசு அவ்வாறு நடவடிக்கை எடுத்துவிட்டால் முதலீடுகளை வெளியே கொண்டு செல்வதில் சிக்கல் வரலாம் என்று யூக வியாபாரிகளும், ஏஜென்டுகளும், பங்குச் சந்தை தரகர்களும் முதலீட்டாளர்களிடையே இடையே பரப்பிய பயத்தின் காரணமாக நேற்று பங்குச் சந்தைகளில் இருந்து பெரும் முதலீட்டாளர்கள் ஏராளமான முதலீடுகளைத் திருப்பி எடுக்க ஆரம்பித்தனர்.
ஒரே நாளில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான பணம் (டாலர்கள்) வெளியே எடுக்கப்பட்டுவிட்டது. இதனால் டாலர்களுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மடமடவென சரிய ஆரம்பித்தது.
ஒரு நாட்டில் டாலர்கள் அதிகமாக இருந்து அந் நாட்டு கரன்சியின் அளவு குறைவாக இருந்தால் அந்த கரன்சியின் மதிப்பு அதிகரிக்கும். இது 'உல்டா' ஆனால், டாலரின் மதிப்பு அதிகரித்து அந் நாட்டு கரன்சியின் மதிப்பு குறையும். இது தான் இப்போது இந்தியாவில் நடக்கிறது.
இன்றைய நிலவரப்படி ஒரு டாலரைத் தந்தால் 62 ரூபாய் கிடைக்கும் சூழல் உருவாகிவிட்டது. இது விரைவில் 70 ரூபாயைத் தொட்டாலும் ஆச்சரியப்படாதீர்கள்.












Click it and Unblock the Notifications