எம்.பி., எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: மத்திய அரசு மனுவை மறுபரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்
டெல்லி: குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் பதவியைப் பறிக்க வகை செய்யும் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும், தண்டனையை எதிர்த்து அவர்கள் மேல் கோர்ட்களில் மேல்முறையீடு செய்து இடைக்கால தடை பெற முடியாது எனவும் ஜூலை 10ம் தேதியன்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது.

அதே சமயம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் ஏற்கனவே மேல்முறையீடு செய்திருந்திருந்தால் அவர்களை இந்த தீர்ப்பு கட்டுப்படுத்தாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
150 பேர் மீது குற்றவழக்குகள்
லோக்சபாவில் உள்ள 543 உறுப்பினர்களில் சுமார் 150 பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஜனநாயக சீர்திருத்த கழகம்(ஏ.டி.ஆர்.,) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம்(என்.இ.டபிள்யூ.,) ஆகிய இரு அரசு சாரா அமைப்புக்கள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
15 எம்.பிக்கள் மீது கொலை வழக்கு
தேர்தல் அறிக்கை குறிப்பின்படி சுமார் 15 எம்.பி.,க்கள் மீது குறைந்தது ஒரு கொலை வழக்காவது பதிவு செய்யப்பட்டுள்ளதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தேர்தலில் போட்டியிட தடை
ஜூலை 10ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த மற்றொரு தீர்ப்பில், தண்டனை பெற்று சிறையில் இருக்கும் போதோ அல்லது போலீஸ் விசாரணை காவலில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என தெரிவித்திருந்தது.
மத்திய அரசு எதிர்ப்பு
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மறு ஆய்வு மனு
இந்த இரு தீர்ப்புக்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு சார்பில் ஆகஸ்ட் 12ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை பின்பற்றினால் அரசின் பெரும்பாலான மக்கள் பிரதிநிதி இடங்கள் காலியாகும் எனவும் மத்திய அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணைக்கு ஏற்பு
இந்த மனுக்கள் மீதான விசாரணை செப்டம்பர் 4ம் தேதியன்று நடைபெற உள்ளது. பொதுவாக இது போன்ற மறுபரிசீலனை மனுக்கள் மீதான ஆலோசனை நீதிபதிகள் அறையில் நடக்கும். ஆனால் இந்த மனுக்கள் மீதான ஆலோசனை நீதிமன்ற அறையிலேயே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications