புதுவை மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணமாக கள்ள நோட்டை செலுத்தினரா பெற்றோர்?
புதுச்சேரி: புதுவையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணம் செலுத்த வந்த பெற்றோர்கள் கள்ள நோட்டை செலுத்தியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கல்லூரி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. அப்போது அதில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஊழியர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் முறையீடு செய்தனர். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸில் புகார் செய்யப்பட்டது. விசாரணையின்போது கல்லூரி மக்கள் தொடர்பு அதிகாரி பாஸ்கரன் போலீஸாரிடம் தெரிவிக்கையில், கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களில் யாரோ ஒருவர் கல்வி கட்டணம் செலுத்தும்போது கள்ள 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து உள்ளார். அது எங்களுக்கு தெரியவில்லை.
இந்த பணத்தை ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடாவின்போது கொடுத்து உள்ளோம். அவர்கள் புழக்கத்தில் விட்டபோது அதில் கள்ள நோட்டு இருந்தது தெரிய வந்தது. இந்த கள்ள நோட்டுகளை யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாராக தெரிவித்தார்.
மொத்தம் 115, 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் தற்போது போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் பல கள்ள நோட்டுக்கள் இருக்கும் என்று தெரிகிறது. இந்த கள்ள நோட்டுக்களை செலுத்தியது உண்மையில் யார் என்று தெரியவில்லை.
பெற்றோர்கள் கொடுத்த பணமா அல்லது ஊழியர்கள் யாரேனும் இதில் கைவரிசை காட்டியுள்ளனரா என்ற சந்தேகமும் இருக்கிறது. போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications