தலைக்கனம் இல்லாத அரசியல்வாதி மு.க.ஸ்டாலின் ... மலையாள பத்திரிக்கை புகழாரம்
சென்னை: தமிழகத்தில் தலைக்கனம் இல்லாத அரசியல்வாதியாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விளங்குவதாக மலையாள பத்திரிக்கை ஒன்று அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.
கேரள மாநிலத்தில் இருந்து வெளிவரும் ஜனசேமா என்ற மலையாள மாத இதழில் வெளிவருகின்றது.
இந்த இதழி்ன் ஜூலை மாத பதிப்பில் மு.க.ஸ்டாலினைப் பற்றி விரிவாீன கட்டுரை வெளியிட்டுள்ளனர்.

பலரின் நம்பிக்கையைப் பெற்றவர்
மு.க.ஸ்டாலினுக்குப் பதவி, புகழ் இரண்டும் சாதாரணமாகக் கிடைத்து விடவில்லை பல போராட்டங்கள், பல சிறைவாசங்கள், பலரின் நம்பிக்கைகள் மூலம் கிடைத்தது.

தேகம் ஒடிசல்தான்... முகம் வசீகரமானது
தற்போது தமிழகம் போற்றும் மு.க.ஸ்டாலினுக்கு வயது 60. அவர் முதிர்ச்சியும், பக்குவமும் பக்கபலமாகக் கொண்டவர். அவருக்கு ஒடிசலான தேகம்தான் என்றாலும் அவரது முகம் விரசமில்லாமல் வசீகரமாக இருக்கக் கூடியது.

துள்ளல் இன்னும் குறையவில்லை
குழந்தைப் பருவத்தின் துள்ளலும், சுறுசுறுப்பும் மக்கள் போற்றும் இந்த தளபதியிடம் இப்போதும் குறைவில்லை.

குடும்பத்தினரை விட்டு விட்டு
மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பில் இருந்த போது தமிழகம் முழுவதும் கார், ரயில், விமானம் மூலம் சுற்றுப்பயணம் செய்து இருக்கிறார். பல நாட்கள், பல மாதங்கள் என, தன்னுடைய குடும்பத்தினரை விட்டுவிட்டு வெளியூர்களில் பொது மக்கள், கட்சித் தொண்டர்களுடன் நேரத்தைச் செலவிட்டு இருக்கிறார்.

உழைப்பின் தாரக மந்திரம்
பதவியில் இருந்தாலும் இல்லாமல் இருந்தாலும் மக்களுக்காக உழைக்கின்ற தாரக மந்திரத்தினை தனது தந்தையும், மூத்த அரசியல்வாதியுமான மு.கருணாநிதியிடம் இருந்து கற்றுக்கொண்டார்.

தினசரி 100க்கும் மேற்பட்டோருடன் சந்திப்பு
தினமும் காலை ஸ்டாலின் தனது வீட்டில் 100 க்கும் மேற்பட்ட பார்வையாளர் களைச்சந்திக்கிறார். கட்சியின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றாலும், அங்கேயும் பல நூறு பார்வையாளர்கள், கட்சித்தொண்டர்கள் என தனது பணியை செய்கிறார்.

மனுக்கள் பெறுகிறார்
கட்சிப் பொதுக் கூட்டங்களிலும்கூட மனுக்களுடன் தன்னைச் சந்திக்க வருபவர்களை தவறாமல் சந்திக்கிறார். அவர் தினசரி சந்திக்கும் நபர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமானதாகும்.

மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு
துணை முதல்வராகப் பணியாற்றிய போது, இரவு நேரங்கள் எனக் கூடப் பார்க்காமல் தனது துறை சார்ந்த அதிகாரிகள், உதவியாளர்களுடன் விவாதித்து மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டார்.

கலைஞருக்கு முன்பு நான் எம்மாத்திரம்
இவரது ஓயாத உழைப்பும், சுறுசுறுப்பும் எப்படி? எனப் பலரும் வியப்பது உண்டு! இவரிடம் கேட்டால் கலைஞரின் சுறுசுறுப்பு, அவருடைய ஓயாத உழைப்புக்கு முன்னால் இது எம்மாத்திரம் என்பார்.

மக்கள் எதிர்பார்ப்பு
அது மட்டும் அல்ல திராவிட இயக்கத்தின் தொண்டர்களும், இந்த தி.மு.க. மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் அவர்களின் எதிர்பார்ப்புகளும்தான் என்னை இவ்வாறு பணி செய்ய வைக்கிறது என்பார்.

காலையில் நடைப் பயிற்சி... மதியம் குட்டித் தூக்கம்
மு.க.ஸ்டாலின் காலையில் 30 நிமிடம் நடைப்பயிற்சி, 45 நிமிடம் யோகாசனம், மதிய உணவுக்குப் பிறகு முடிந்தால் ஒரு குட்டித் தூக்கம் மற்றும் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் நேரத்தைக் கழிப்பது என வரைமுறையோடு இருப்பதால் கூட என் பணியில் சுறுசுறுப்பாக இருக்கிறேன் என்கிறார்.

நான் கருணாநிதியின் தளபதி
இந்த சுறுசுறுப்புதான் மு.க.ஸ்டாலினை ஒரு தலைவனாக உருமாற்றி இருக்கிறதா? என்றால் மறுக்கிறார் ஸ்டாலின். நான் என்றுமே தலைவர் கருணாநிதியின் தளபதி என்கிறார்.

வீட்டு நிர்வாகத்தில் மனைவி துர்கா
கட்சிப்பணிகள், ஆட்சிப்பணிகள் என அவரது செயல்பாடுகள் அதிக நேரத்தினை எடுத்துக் கொள்ள, வீட்டு நிர்வாகத்தினை தன் மனைவி துர்காவிடம் கொடுத்து விட்டார். மு.க.ஸ்டாலின் தம்பதிகளுக்கு உதயநிதி என்ற மகனும், செந்தாமரை என்ற மகளும் உள்ளனர்.

5வது மாதத்திலேயே பிரிவை உணர்ந்த துர்கா
ஸ்டாலினுக்குத் திருமணமான 5 வது மாதத்திலேயே மனைவி துர்கா ஸ்டாலின் பிரிவை உணர்ந்தார். வாரங்கள், மாதங்கள் இல்லை சரியாக 1 வருடம். ஆம் ! அப்போது தான் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகி ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

13 முறை கைது
தமிழக மக்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் உழைக்கின்ற தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவனான ஸ்டாலின் இது வரை 13 முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த ஒரு வருட சிறை வாசத்தில் அவர் பல பாடங்களை, அனுபவங்களைக்கற்றார்.

அப்பாவைப் போலவே
தனது அப்பாவைப் போலவே தமிழ் ஆர்வம் கொண்ட மு.க.ஸ்டாலின் பேச்சு, எழுத்து, சினிமா, நடிப்பு என பல துறைகளில் கால் பதித்தாலும், இப்போது தமிழக மக்களின் அன்பால் உருவான ஆசனத்தில் ஆற்றல்மிக்க தளபதியாக அமர்வதற்கு விதையாக அமைந்தது அந்த சிறை வாழ்க்கையே.....

கருணாநிதிக்கு 33
திமுக தலைவர் கருணாநிதி 33 வயதில் எம்.எல்.ஏ.வானார். 43 வயதில் பொதுப்பணித்துறை அமைச்சரானார். 45 வயதில் அவர் தமிழகம் எனும் உயர்ந்த தேசத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

ஸ்டாலினுக்கு 14
ஆனால் மு.க.ஸ்டாலின் 14 வயதில் தி.மு.க.வின் மாணவர் அணியில் இணைந்து செயல்பட்டார் 23 வயதில் அவருக்கு இளைஞரணி செயலர் பொறுப்பு தரப்பட்டது. இந்த அமைப்புதான் இன்று தி.மு.க.வினைத்தாங்கி நிற்கும் கட்டுப்பாடான, உறுதியான அமைப்பாக லட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்டு உள்ளது.

36 வயதில் எம்.எல்.ஏவான ஸ்டாலின்
இந்த இளைஞரணியில் இருந்து இன்றைக்கும் பலர் எம்.எல்.ஏ.க்களாக, எம்.பி.க்களாக, அமைச்சர்களாக, மாவட்டச் செயலர்களாக இருக்கிறார்கள் இருந்திருக்கிறார்கள். ஸ்டாலின் 36 வது வயதில் முதன்முறையாக எம்.எல்.ஏ.வானார். பிறகு மேயராகவும், அமைச்சராகவும் இருந்து தனது 56 வது வயதில் துணை முதல்வரானார்.

தகுதி இருந்தும்...
ஸ்டாலின் எம்.எல்.ஏ. வான போது அவரது கட்சித் தொண்டர்கள் பலரும் அவர் அமைச்சர் ஆவார் என்றார்கள். ஆனால் அவரது இளைஞரணியைச் சேர்ந்த பலரும் ஆனார்கள். ஸ்டாலின் அமைச்சர் ஆகவில்லை. அமைச்சராகும் தகுதி ஸ்டாலினுக்கு உண்டு. அதே நேரத்தில் அவர் என்னுடைய மகன் என்பதால் இந்த தகுதியை இழக்கிறார் என்றார் தலைவர்.

படித்தவர்களுக்குப் பிடித்தவர்
தமிழகத்தில் 70 சதவீதம் இளம் வாக்காளர்கள் இருக்கும் இந்த தேசத்தில் ஆர்ப்பாட்டமில்லாத, நாகரிகமான அரசியலையே அவர்கள் விரும்புகிறார்கள். இன்றைய படித்த, நடுத்தரவர்க்க, மேல்தட்டு இளைஞர்கள் பலருக்கும் ஸ்டாலின் செயல்பாடும், அணுகுமுறையும் பிடித்து இருக்கிறது.

அவசியமில்லை
ஸ்டாலின் இன்றைய இளைய தலைமுறையின் தலைவராவதற்கு அவரும் இளைஞராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இளைஞர்களின் கனவுகளை நனவாக்கு கின்ற மனோ பாவம், வளமான தமிழகத்தை உருவாக்கும் கனவுகள், திட்டங்கள் அவரிடம் இருக்க வேண்டும்.

சீரிய கனவு
கிராமப்புற மாணவர்கள், கிராமப்புற பெண்களின் வளர்ச்சி, நகர்பகுதி ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சி, கிராமத்தில் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் சீரிய திட்டங்களைத் தீட்டுவது எனது கனவு என்கிறார் ஸ்டாலின். ஆனால் ஸ்டாலின் தனது கனவுகளை முழுமையாக நிறைவேற்றுபவராக மாற காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டியுள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ ஏரான முரசொலி நாளிதழில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications