அடக்குமுறையில் ஆங்கிலேயர்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவரல்ல என்பதை ஜெ. நிரூபித்துள்ளார்: ராமதாஸ்
சென்னை: அடக்குமுறைகளை ஏவுவதில் ஆங்கிலேயர்களுக்கு தாம் எந்த வகையிலும் சளைத்தவரல்ல என்பதை இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா நிரூபித்திருக்கிறார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தருமபுரி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் இடம்பெற்றுள்ள தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
144 உத்தரவு நடைமுறையில் இருப்பதால் தான் தருமபுரி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடிவதாகவும், எனவே தருமபுரி மாவட்டத்தில் 144 தடை தொடர வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியிருக்கிறது.
144 தடையின் உதவியுடன் தான் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியும் என்று தமிழக அரசு கூறுவது உண்மையென்றால், அதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஏனெனில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும். அந்தக் கடமையை செய்வதற்காக 144 தடை உத்தரவை பிறப்பிப்பது என்பது கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு சமமாகும்.
அடிப்படையில் 144 தடை உத்தரவு அடக்குமுறை சட்டமாகும். இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளான 14 (சட்டத்தின் முன் அனைவரும் சமம்), 19 (1) (அ) (பேச்சுரிமை), 19 (1) (ஆ) (அமைதியாக கூடுதல்), 19 (1) (இ) (அமைப்புகளை உருவாக்குதல்), 19 (1) (ஈ) (நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சுதந்திரமாக நடமாடுதல்), 21 (வாழ்வதற்கான உரிமைகள்) ஆகியவற்றுக்கு எதிரானதாகும். இத்தகைய கருப்பு சட்டத்தை ஆட்சியாளர்கள் விருப்பம்போல பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றங்கள் பல்வேறு தருணங்களில் தீர்ப்பளித்தன.
டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை எதிர்த்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அதை அடக்குவதற்காக டெல்லி காவல்துறை 144 தடை உத்தரவை பிறப்பித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி. முருகேசன், நீதிபதி வி.கே. ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘இந்திய அரசியல் சட்டத்தில் பேசுவதற்கும், கருத்துக் கூறுவதற்கும், இயக்கம் நடத்துவதற்கும் சில உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த உரிமைகளை பறிக்கும் வகையில் 144 தடை உத்தரவை பிறப்பிக்கக் கூடாது. 144 தடை சட்டத்தை ஆட்சியாளர்கள் விருப்பம் போல பயன்படுத்தினால் அச்சட்டம் அதன் புனிதத் தன்மையை இழந்துவிடும்'' என்று கூறி கண்டனம் தெரிவித்தது.
அதற்கு முன்பாக 1973-ஆம் ஆண்டு இதே போன்ற வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு,‘‘ ஒரு ஜனநாயகத்தில் மக்கள் தங்களுக்கிடையே கருத்துக்களை பகிர்வதற்கும், பரப்புவதற்கும் சாலைகளும். தெருக்களும் தான் இயற்கையான இடங்கள் ஆகும். அத்தகைய இடங்களில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் தான் ஜனநாயகத்தின் அடிப்படையாகும். இந்த உரிமைகளை பறிக்கும் வகையில் அரசுகள் உத்தரவிட்டால் அது செல்லாது'' என்று கூறியுள்ளது.
ஆனால், சட்டத்தை மிதிப்பதையே வழக்கமாக கொண்டுள்ள தமிழக அரசு, விழுப்புரம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் 144 தடை உத்தரவை மாதக் கணக்கில் நடைமுறைப் படுத்தி வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் இந்த தடை உத்தரவு இப்போது பிரகடனப் படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் 15-க்கும் அதிகமான மாவட்டங்களில் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடை காரணமாக தருமபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் தங்களின் ஜனநாயக கடமைகளை ஆற்ற முடியவில்லை.
சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் போர்வையில் 144 தடையாணைக்கு பின்னால் ஒளிந்து கொண்டு, ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலில் தமிழக அரசு ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்களின் தவறுகளை எதிர்த்து எவரும் குரல் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த அடக்குமுறையை தமிழக அரசு ஏவி விட்டிருக்கிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144 பிரிவு வெள்ளையர்கள் ஆட்சியில் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட ஒன்றாகும். அச்சட்டத்தை இப்போதைய ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சிகளை, குறிப்பாக பாமகவை ஒடுக்குவதற்காக பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் அடக்குமுறைகளை ஏவுவதில் ஆங்கிலேயர்களுக்கு தாம் எந்தவகையிலும் சளைத்தவரல்ல என்பதை இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா நிரூபித்திருக்கிறார்.
ஜனநாயகத்தின் முதல் தூணான சட்டப்பேரவையிலும் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. அரசுக்கு எதிராக அங்கும் குரல் கொடுக்க முடியவில்லை. அவை நேரத்தின் பெரும்பகுதி முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிக்கை வாசிக்கவும், எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சிக்கவும் தான் செலவிடப்படுகிறதே தவிர, மக்களின் கோரிக்கைகளையும், அரசின் குறைகளையும் சுட்டிக்காட்ட வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. அதையும் மீறி எவரேனும் அரசின் குறைகள் பற்றி பேசினால் அவர்கள் பேரவையிலிருந்து வெளியே தூக்கி வீசப்படும் அளவுக்கு தான் சட்டப்பேரவையில் ஜனநாயகம் தழைத்தோங்கியிருக்கிறது. மொத்தத்தில், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக சட்டப்பேரவையில் 110, சட்டப்பேரவைக்கு வெளியே 144 ஆகிய பிரிவுகளை முதலமைச்சர் ஜெயலலிதா ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்க அவதூறு வழக்கு என்ற ஆயுதத்தையும் அரசு பயன்படுத்தி வருகிறது. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் எதைப் பேசினாலும் உடனடியாக அவர்கள் மீது அவதூறு வழக்குப் பாய்கிறது. இன்றைய நிலையில் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து எந்த அரசியல் கட்சியின் தலைவரும் தப்பவில்லை. சட்டப்பேரவையில் முதலமைச்சருக்கு சவால் விடுத்தார் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் மீது அவர் செல்லும் இடமெல்லாம் அவதூறு வழக்குகளும், கிரிமினல் வழக்குகளும் தொடரப்படுகின்றன.
ஊடக சுதந்திரமோ உயிரிழக்கும் நிலையில் உள்ளது. முதலமைச்சரின் உரைகள் மற்றும் அறிக்கைகளையும், அவரது புகழ்பாடும் செய்திகளையும் மட்டுமே வெளியிட வேண்டும் என்று ஊடகங்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றன. அரசுக்கு எதிரான எதிர்க்கட்சித் தலைவர்களின் விமர்சனத்தை வெளியிடும் பத்திரிக்கைகள் மீது அவதூறு வழக்கு தொடருவதும், விளம்பரங்களை நிறுத்துவதும் வாடிக்கையாகி விட்டன. பட்டமளிப்பு விழா ஒன்றில் முதலமைச்சர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது, அமைச்சர்கள் தூங்கி வழியும் புகைப்படத்தை வெளியிட்டதற்காக ஒரு பத்திரிக்கைக்கு அளிக்கப்பட்டு வந்த அரசு விளம்பரங்கள் அடியோடு நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதனால், அரசு செய்யும் தவறுகளை விமர்சிக்க முன்வர இயலாத நிலைக்கு ஊடகங்கள் தள்ளப்பட்டுள்ளன.
சர்வாதிகார நாடுகளில் கூட எதிர்க்கட்சிகள் மீதும், ஊடகங்கள் மீதும் இத்தகைய அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதில்லை. இதேநிலை தொடர்ந்தால் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக இன்னும் கொடூரமான அடக்குமுறைகளை தமிழக அரசு கட்டவிழ்த்துவிடும். எனவே, எதிர்க்கட்சிகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 144-ஆவது பிரிவை தமிழக அரசு தவறாக பயன்படுத்திவருவதைக் கண்டித்தும், அடக்குமுறைகளை எதிர்த்தும் ஜனநாயகத்தில் அக்கறை உள்ள கட்சிகளும், அமைப்புகளும் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications