மோடியை விமர்சித்தால் கூட பொறுத்துக் கொள்வார்கள்.. அதானியை பேசினால் அவ்ளோதான்.. காங்கிரஸ் விளாசல்!
அரியலூர்: பிரதமர் மோடியை பற்றி விமர்சித்து பேசினால் கூட இந்திய நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதானியை பற்றி பேசினால் டிஸ்மிஸ் செய்கிறது என விமர்சித்துள்ளார் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி.
அரியலூர் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில், "பிரதமர் மோடியை பற்றி விமர்சித்து பேசினால் கூட இந்திய நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதானியை பற்றி பேசினால் வெளியே அனுப்புகிறது. நாடாளுமன்றத்தை மோடி நடத்துகிறாரா? அதானி நடத்துகிறாரா?

மேற்கு வங்க பெண் எம்.பி மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்தது மிகப்பெரிய ஜனநாயக விரோத செயல். அதானியை பற்றி பேசினால், எம்.பியாக இருக்கக்கூடாது என்ற நிலை இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை. அதானிக்கு எதிரான நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு அதானி பற்றி பேசியதாக பொய்யாக குற்றம்சாட்டி எம்.பி பதவியை விட்டு இருக்கிறார்கள். செங்கிஸ்கான், தைமூர் அமைச்சரவையில் கூட இதுபோல நடக்காது.
காஷ்மீரின் 370வது சிறப்பு அந்தஸ்து விதியை நீக்கியது பற்றியும், அம்மாநிலத்தை சிறு சிறு துண்டுகளாக்கியது பற்றியும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவருக்கு அந்த அதிகாரம் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறதே தவிர. அப்படி ஒரு ஏற்பாட்டை செய்தது தவறு என்று சொல்லவில்லை. மோடி அதை மறைத்து பேசுகிறார். அரியலூர் ரயில் கவிழ்ப்பு சம்பவத்தால் அன்றைய ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் கடுமையாக கூறியும் பிரதமர் மோடி ராஜினாமா செய்யாமல் இருக்கிறார். காரணம் அவர்கள் சர்வாதிகாரிகள்.
சென்னை மழை வெள்ளத்தை நாம் அறிவியல் பூர்வமாக சிந்தித்து பார்க்க வேண்டும். இது சாதாரண வெள்ளம் அல்ல. ஒரு மிகப்பெரிய புயல் சென்னையை மையமாக கொண்டு 17 மணி நேரம் நகராமல் இருந்ததே இதற்கு காரணம். 17 மணி நேரம் மழை பெய்தால் இந்தியாவில் எந்த மாநிலமும் தாங்காது. மிக்ஜாம் புயல் மீட்பு பணிகளை திமுக அரசு சிறப்பாக செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்












Click it and Unblock the Notifications