கர்நாடக பேரவையில் புயல்! மசோதா நகலை துணை சபாநாயகர் முகத்தில் வீசி அமளி! பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்
பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் துணை சபாநாயகர் முகத்தில் சட்ட மசோதா நகலை கிழித்து வீசி அமளி துமளியில் ஈடுபட்ட 10 பாஜக எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார் சபாநாயகர் யு.டி.காதர்.
கர்நாடகாவில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இக்கூட்டத் தொடர் முழுவதும் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள 10 பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதியில்லை.

கடந்த 2 நாட்களாக பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஒருங்கிணைப்பு பணிக்கு எப்படி அமர்த்தலாம் என பாஜக எம்.எல்.ஏ.க்கள் சுனில்குமார், வேதவியாஸ் காமத், யஷ்பல் சுவர்னா உள்ளிட்டோர் புயலை கிளப்பினர். அரசு இயந்திரத்தை காங்கிரஸ் தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் அதிகார துஷ்பிரயோகம் எனவும் பாஜக தரப்பில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையை நடத்த விடாமல் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி வந்த போதும், சபாநாயகர் யு.டி.காதர் 5 சட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய அனுமதித்தார். அதேபோல் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா மற்றும் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் தனித்தனி அறிக்கைகள் தாக்கல் செய்யவும் அனுமதி கொடுத்தார்.
மேலும், இன்றைய தினம் உணவு இடைவேளை இல்லாமல் சட்டசபை நடக்கும் என்றும் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேச விரும்பும் எம்.எல்.ஏ.க்கள் இருந்து பேசலாம் என்றும் சாப்பிட செல்பவர்கள் செல்லலாம் எனவும் யு.டி.காதர் அறிவித்ததோடு, சபையை தொடர்ந்து நடத்துமாறு ருத்ரப்பா லமாணியை கேட்டுக்கொண்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை அமைதிப்படுத்தும் நோக்கில் உணவு இடைவேளை இல்லாமல் சபையை நடத்த தீர்மானித்தார் காதர். அதன்பேரில் துணை சபாநாயகர் ருத்ரப்பா ரமாணி தொடர்ந்து உணவு இடைவேளை இல்லாமல் சபையை நடத்த முயன்ற போது நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. சபை கூச்சல் குழப்பமாக உள்ளபோது எப்படி நடத்தலாம் என ஆவேசமாக கேள்வி எழுப்பிய பாஜக முன்னாள் அமைச்சர் குமார், கையில் இருந்த சட்டமசோதா நகலை கிழித்து துணை சபாநாயகர் ருத்ரப்பா லமாணி முகத்தில் வீசியெறிந்தார்.

மேலும், எந்த விதியின் கீழ் உணவு இடைவேளை கூட இல்லாமல் சட்டசபையை நடத்துகிறீர்கள் என பாஜக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான குமார் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இதனால் கர்நாடக சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே எல்லாம் நடந்து முடிந்த பிறகு சினிமா படத்தில் வருவது போல் கடைசியாக வந்த சட்டசபை காவலர்கள் துணை சபாநாயகருக்கு அரணாக நின்றனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ.க்களை வெளியே அனுப்புமாறு சபை காவலர்களிடம் உத்தரவிட்ட துணை சபாநாயகர் லமானி, 3 மணி வரை சபை நடவடிக்கையை ஒத்தி வைத்தார்.
இதனிடையே காங்கிரஸ் அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா மற்றும் சுரேஷா எம்.எல்.ஏ. ஆகியோர், துணை சபாநாயகர் முகத்தில் காகிதங்களை கிழித்து வீசும் வரை நீங்க என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என சட்டசபை காவலர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தினர். இதனிடையே மதியம் 3 மணிக்கு சபை கூடியதும் மீண்டும் கூச்சல் குழப்பம் தொடர்ந்ததால் பாஜக எம்.எல்.ஏ.க்கள் தீரஜ் முனிராஜ், உமாநாத், அரவிந்த் பெல்லாட், யஷ்பல் சுவர்னா, வேதவியஸ் காமத், அசோக், சுனில் குமார், பரத் ஷெட்டி, அஷ்வத்நாராயண், ஞனேந்திரா, ஆகிய 10 பேரையும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் காதர்.
இதனிடையே நிதிஷ்குமார், ஸ்டாலின், மமதா பானர்ஜி, ஹேமந்த் சோரன் போன்ற பல மாநில முதலமைச்சர்கள் கர்நாடக மாநிலத்துக்கு விருந்தாளிகளாக வந்திருந்த சூழலில் அவர்களை வரவேற்று அவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டிய பொறுப்பு அரசு அதிகாரிகளுக்கு இருந்ததாகவும் மற்றபடி எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு கர்நாடக அரசின் பங்களிப்பு எந்த வகையிலும் இல்லை எனவும் முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications