உயிரை காப்பாற்றிய ஸ்டெம் செல்! இருவர் பெயரும் மந்தீப் சிங்.. சந்தித்து கொண்ட அந்த தருணம்.. நெகிழ்ச்சி!
ஸ்டெம் செல் என்பது லட்சத்தில் ஒருவருக்குதான் பொருந்தும் என்பதாலும், இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்பதாலும் இது கிடைப்பது அரிதாக இருக்கிறது.
பெங்களூரு: ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஸ்டெம் செல் கொடுத்து உதவிய பெங்களூரை சேர்ந்தவரும், ஸ்டெம் செல் பெற்று புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த பஞ்சாபை சேர்ந்த நபரும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக்கொண்ட காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் சிறப்பு என்னவெனில் இருவரின் பெயரும் மந்தீப் சிங் என்பதுதான்.
பஞ்சாபை சேர்ந்த மந்தீப் சிங்குக்கு(34) கடந்த 2009ம் ஆண்டு ரத்த புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பாதிப்பை இவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்காததால் வாழ்க்கையே உடைந்து போனதைப்போல மனதளவில் பலவீனமடைந்திருக்கிறார். தனது மகனின் நிலையை காண பொறுக்காத பெற்றோர்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். தொடக்கத்தில் சிகிச்சை சற்று கடினமாக தெரிந்தாலும் போக போக மந்தீப் முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ள பழகிவிட்டார்.
சுமார் 7 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை சீரடையாமல் மோசமடைய தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு உறுப்புகளும் பலவீனமடைய தொடங்கின. உடல் முழுவதும் ஊசி குத்துவதை போன்ற ஒரு வலியை மந்தீப் அனுபவித்திருக்கிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டாலே கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதிலும் ரத்தபுற்றுநோயை எதிர்கொள்பவர்களின் நிலை மோசமாக இருக்கும்.

பாதிப்பு
அதீத குளிர் காய்ச்சல், எடையிழப்பு, எலும்பு மூட்டுகளில் வலி, எப்போதும் சோர்வு, ரத்த சோகை போன்றவை உடலை ஒரு வழி செய்துவிடும். இந்த பாதிப்புகளோடு சேர்ந்து புற்றுநோயை குணப்படுத்த மருந்து எடுத்துக்கொள்வதும் நோயாளியை படாதபாடு படுத்திவிடும். இவ்வளவு துயரங்களையும் பஞ்சாபை சேர்ந்த மந்தீப் சிங் அனுபவித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அதாவது 2017ம் ஆண்டு வரை இவருக்கு கைகொடுத்த மருந்துகள் அதன் பின்னர் வேலை செய்யவில்லை. எனவே மேற்குறிப்பிட்ட பாதிப்புகள் மேலும் அதிகரிக்க தொடங்கின. மருத்துவர்களே இவரின் நிலையை கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழித்திருந்தனர்.

ஸ்டெம் செல்
பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு ஸ்டெம் செல் தேவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்டெம் செல் சிகிச்சை மேற்கொண்டால்தான் இந்த மருந்துகள் இவரின் உடலில் வேலை செய்யும். அதன் பின்னர்தான் உடல்நலம் மேம்படும். எனவே மந்தீப்பின் குடும்பத்தினர் இவருக்காக ஸ்டெம் செல் டோனரை தேட தொடங்கினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு ஒரேயொரு நம்பிக்கைதான் இருந்தது. சக மனிதர்கள்தான் அந்த நம்பிக்கை. சக மனிதனால்தான் தன்னுடைய மகனை காப்பாற்ற முடியும் என்பதை அறிந்த பெற்றோர்கள் ஸ்டெம் செல் டோனரை தேடும் முயற்சியை கைவிடவில்லை.

தானம்
ரத்த தானம் போல ஸ்டெம் செல் தானம் குறித்து பெரிய அளவில் யாருக்கும் தெரியாது. எனவே இரண்டு ஆண்டுகள் நீண்ட தேடுதலுக்கு பின்னர் பெங்களூரை சேர்ந்த ஒருவரிடமிருந்து ஸ்டெம் செல் தானம் கிடைத்திருக்கிறது. இதற்கு DKMS-BMST எனும் அறக்கட்டளையும் உதவியுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. மந்தீப் சிங் முழுமையாக நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளார். ஆனால் அவர் இத்துடன் நின்றுவிடவில்லை. தனக்கு ஸ்டெம் செல் தானம் செய்த நபரை சந்திக்க முயன்றிருக்கிறார். இந்த நிகழ்வுக்கு DKMS-BMST அறக்கட்டளை ஏற்பாடு செய்திருக்கிறது.

சந்திப்பு
ஏறத்தாழ 10 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்னர் மீண்டும் உயிருடன் திரும்பிய மந்தீப் சிங்(34) தனக்கு ஸ்டெம் செல் கொடுத்து உதவிய பெங்களூரை சேர்ந்த மந்தீப் சிங்கை(42) நேரில் சந்திருக்கிறார். இருவரின் சந்திப்பும் நெகிழ்ச்சிகரமானதாக இருந்திருக்கிறது. இருவரின் பெற்றொரும் ஒருவரையொருவர் பார்த்து பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அத்துடன் இருவரும் இனி வரும் காலங்களில் ஸ்டெம் செல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருப்பதாக கூறியுள்ளனர். இருவருக்கும் ஒரே மாதிரியான ஸ்டெம் செல் என்பது லட்சத்தில் ஒருவருக்குதான் இருக்கும் என்பதால் இதற்கு இவ்வளவு டிமான்ட் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications