நடிகர் சுதீப் அதிரடி முடிவு.. சிறந்த நடிகருக்கான கர்நாடகா அரசின் விருதை வாங்க மறுப்பு.. என்ன காரணம்?
பெங்களூர்: கர்நாடகா சார்பில் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை பெற நடிகர் கிச்சா சுதீப் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். இவர் தமிழிலும் ‛ஈ’ உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கர்நாடகாவில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் தான் நடிகர் கிச்சா சுதீப்பிற்கு சிறந்த நடிகருக்கான விருது என்பது அறிவிக்கப்பட்டது. கர்நாடகா அரசு சார்பில் சிறந்த நடிகருக்கான விருது என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 2019 ம் ஆண்டுக்கான கன்னட திரையுலக சிறந்த நடிகர், நடிகைகள், பாடகர்களுக்கான விருது என்பது கர்நாடகா அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதில் 2019ல் வெளியான பயில்வான் திரைப்படத்துக்காக நடிகர் கிச்சா சுதீப்பிற்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டத. அதேபோல் சிறந்த நடிகைக்கான விருது அனுபமா கவுடா, சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வி ஹரிகிருஷ்ணா, சிறந்த ஆண் பாடகருக்கான விருது ரகு தீக்சீத், சிறந்த பெண் பாடகருக்கான விருது ஜெயதேவி ஜங்கமசெட்டி உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 ஆண்டுகள் தாமதமாக கர்நாடகா அரசு சார்பில் விருது பட்டியல் என்பது வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் நடிகர் கிச்சா சுதீப், சிறந்த நடிகர் என்று தன்னை தேர்வு செய்து வழங்கும் மாநில அரசின் விருதை பெற மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: எனக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது அறிவிக்கப்பட்டு இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன். என்னை சிறந்த நடிகராக தேர்வு செய்த நடுவர் குழுவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். விருதுகள் எதையும் பெறக்கூடாது என்ற முடிவில் பல ஆண்டுகளாக இருக்கிறேன். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்தேன். அதனை தொடர விரும்புகிறேன்.
நடிப்பிற்காக தங்களை அர்ப்பணித்த இன்னும் தகுதியான நடிகர்கள் பலர் உள்ளனர். இந்த விருதை நான் பெறுவதை விட அவர்கள் பெற்றால் சிறப்பானதாக இருக்கும். அப்படி ஒருவர் இந்த விருதை பெறுவதை பார்க்கும்போது அது எனக்கு மகிழ்ச்சி தரும். மக்களை மகிழ்விக்கும் வகையிலான எனது அர்ப்பணிப்பான பணி என்பது தொடரும். விருது எதையும் எதிர்பார்க்காமல் இந்த பணியை தொடருவேன்.
இந்த விருதுக்கு என்னை நடுவர் குழு தேர்வு செய்துள்ளது என்பது இன்னும் என்னை சிறப்பாக பணியாற்ற ஊக்குவிக்கும். நடுவர் குழுவில் உள்ளவர்களுக்கு நன்றி உள்ளவனாக இருக்க விரும்புகிறேன். அதேபோல் இந்த கவுரவத்தை நிராகரிப்பதற்காக நடுவர் குழு மற்றும் மாநில அரசிடம் மனதார மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அதோடு நீங்கள் எனது முடிவை மதித்து எனக்கான விருப்பத்தை அங்கீகரிப்பீர்கள் என்று நினைக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
நடிகர் கிச்சா சுதீப் இப்படி விருது வாங்க மறுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடிகர் சுதீப்பின் திரையுலக பயணத்தை பாராட்டி துமகூரு பல்லைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதனை நடிகர் சுதீப் வாங்க மறுத்து இருந்தார். அந்த வரிசையில் இப்போது கர்நாடகா அரசு சார்பில் வழங்கப்படும் சிறந்த நடிகருக்கான விருதை வாங்க நடிகர் சுதீப் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications