பெண் பயணியிடம் 'அந்தரங்க' உறுப்பை காட்டிய கால்டாக்சி டிரைவர்! புகைப்படத்தால் பெங்களூரில் ஷாக்
பெங்களூர்: பெங்களூரில் 'ஊபர்' வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் பெண் பயணியிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகாரின் மீது ஊபர் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுத்திருப்பதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் விளக்கம் அளித்துள்ளார்.
பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து தினம் தினம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் கூட, பெண்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் கர்நாடக தலைநகர் பெங்களூரில் இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்துள்ள பாலியல் சீண்டல் சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் ஒருவர் பெங்களூருவின் பிடிஎம் 2வது ஸ்டேஜிலிருந்து ஜேபி நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு 'ஊபர்' வாடகை காரை புக் செய்திருக்கிறாராம். காரும் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. இளம்பெண் தனக்கு வந்திருந்த ஓடிபி எண்ணை கூறி பயணத்தை தொடர்ந்திருக்கிறார். பிடிஎம் 2வது ஸ்டேஜலிருந்து, ஜேபி நகர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு 4 கி.மீ தூரம்தான். ஆனால் டிரைவர் வழக்கத்திற்கு மாறான வழியில் சென்றிருக்கிறார்.
உடனே உஷாரான இளம்பெண், ஏன் அடையாளம் தெரியாத வழியில் செல்கிறீர்கள்? கூகுள் மேம்பில் காட்டும் வழியில் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். டிரைவர் ஏதோ சொல்லி சமாளிக்க, இளம்பெண் கறாராக கூகுள் மேப் காட்டும் பாதையில்தான் போக வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து வேறு வழியின்றி டிரைவர் அந்த பாதையில் சென்றிருக்கிறார். இந்த பயணத்தில் டிரைவர் இளம்பெண்ணுடன் அவசியமற்ற உரையாடலை உருவாக்கவும் முயன்றிருக்கிறார். ஆனால் கடைசி வரை இளம்பெண் எதையும் பேசவில்லை.
இந்த சூழல் இளம்பெண்ணுக்கு எரிச்சலையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே தான் இறங்க வேண்டிய ஜேபி நகர் மெட்ரோ நிறுத்தத்திற்கு முன்னரே அவர் இறங்கியிருக்கிறார். பயணத்திற்கான பணத்தை கொடுக்க முயன்றபோதுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது டிரைவர் தன்னுடைய அந்தரங்க உறுப்பை இளம்பெண்ணிடம் காட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனடியாக அங்கிருந்து மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிக்குள் ஓடியுள்ளார்.
தனக்கு நேர்ந்த துயரம் இனி வேறு யாருக்கும் நேர்ந்துவிட கூடாது என நினைத்த இளம்பெண், டிரைவரின் பெயர், போட்டோவை லிங்க்ட் இன் சோஷியல் மீடியாவில் பதிவேற்றி தான் அனுபவித்த பாலியல் தொந்தரவு குறித்து விரிவாக எழுதி ஊபர் நிறுவனத்தையும் டேக் செய்திருக்கிறார். இந்த பதிவு பரவலாக ஷேர் செய்யப்பட்ட நிலையில், ஊபர் நிறுவனம் இளம்பெண்ணை அணுகியுள்ளது.
அதேபோல சம்பந்தப்பட்ட ஓட்டுநரிடமும் ஊபர் குழு விசாரணை மேற்கொண்டது. இதனையடுத்து சம்பவம் உண்மைதான் என்பதை அறிந்த குழு, உடனடியாக சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இந்த சம்பவத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர உதவிய லிங்க்ட் இன் சோஷியல் மீடியாவுக்கும், உரிய நடவடிக்கை எடுத்த ஊபர் நிறுவனத்திற்கும் இளம்பெண் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள போஸ்ட்டில், "ஊபர் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டது. அதேபோல இந்த நடவடிக்கை, வாடிக்கையாளர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிற கொள்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நம்புகிறேன்" என கூறியுள்ளார். ஊபரின் நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications