மக்களே பயப்படாதீங்க.. ஜுலை வரை தண்ணீர் பிரச்சனை வராது.. பெங்களூர் குடிநீர் வாரிய தலைவர் குட்நியூஸ்
பெங்களூர்:பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம். ஜுலை மாதம் வரை தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது என்றும், தற்போதைய தண்ணீர் பிரச்சனை எதனால் ஏற்பட்டுள்ளது என்பது பற்றியும் பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரிய தலைவரான ஐஏஎஸ் அதிகாரி ராம் பிரசாத் மனோகர் விளக்கி உள்ளார்.
கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே பெங்களூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெங்களூரை பொறுத்தமட்டில் பொதுமக்கள் காவிரி நீர் மற்றும் போர்வெல் மூலம் கிடைக்கும் தண்ணீரை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர். காவிரி நீரை குடிநீருக்காவும், போர்வெல் தண்ணீரை பிற பயன்பாட்டுக்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் பெங்களூரின் புறநகர் பகுதிகளில் உள்ள போர்வெல்களில் தற்போது தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. பருவமழை பெய்தது, கோடைக்கு முன்பே கொளுத்தி எடுக்கும் வெயில் உள்ளிட்ட காரணங்களால் போர்வெல்கள் வற்றிவிட்டன. இதனால் தான் பெங்களூரில் தற்போது கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் பணம் கொடுத்து டேங்கர் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதோடு பெங்களூரில் குடிநீரை பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரை தேவையின்றி பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
அதாவது வாகனங்களை சுத்தம் செய்வது, தோட்ட பராமரிப்புக்கு தண்ணீர் விடுவது, செயற்கை நீரூற்றுகளுக்கு தண்ணீரை பயன்படுத்துவது, கட்டுமானங்களுக்கு தண்ணீரை பயன்படுத்துவது, கட்டுமான பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கு தண்ணீரை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தண்ணீர் தட்டுப்பாட்டை நினைத்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் விளக்கம் அளித்துள்ளார். இதுற்றி ராம்பிரசாத் மனோகர் கூறியதாவது: பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் 1,470 எம்எல்டி தண்ணீர் தினமும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மே மாதம் 15ம் தேதி காவிரி 5ம் கட்ட குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதன்மூலம் கூடுதலாக 775 எம்எல்டி தண்ணீர் என்பது கிடைக்கும்.
தற்போதைய சூழலில் பெங்களூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தினமும் 2,100 எம்எல்டி தண்ணீர் தேவையாக உள்ளது. காவிரி 5ம் கட்ட குடிநீர் திட்டத்தால் இது பூர்த்தி செய்யப்படும். தற்போதைய தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என்பது போர்வெல்கள் வறண்டு இருப்பது தான் காரணம். பெங்களூர் புறநகரில் வசிக்கும் போர்வெல்களை நம்பி தான் உள்ளனர். ஆனால் போர்வெல் வறண்டுள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் பல ஏரிகள் வறண்டுள்ளன. இதுவும் தண்ணீர் பிரச்சனைக்கு காரணமாகும்.
பெங்களூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகள் காவிரி தண்ணீரை நம்பி உள்ளன. இருப்பினும் காவிரி படுகையில் உள்ள 4 அணைகளிலும் பெங்களூர் நகருக்கு தேவையான அளவுக்கு போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. பெங்களூர் நகருக்கு ஒரு மாதத்தில் காவிரியில் இருந்து 1.54 TMCFT தண்ணீர் தேவைப்படுகிறது. ஜுலை மாதம் இறுதி வரை பெங்களூர் நகர் மற்றும் புறநகர் பகுதிக்கு 17 TMCFT தண்ணீர் வேண்டும். அதன்படி பார்த்தால் காவிரி படுகை அணைகளில் 34 TMCFt தண்ணீர் இருப்பு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்'' என்றார்.












Click it and Unblock the Notifications