புல்வாமா தாக்குதலை கொண்டாடிய பெங்களூர் கல்லூரி மாணவர்.. 5 ஆண்டு சிறை.. பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு
பெங்களூர்: சிஆர்பிஎப் வீரர்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட புல்வாமா தீவிரவாத தாக்குதலை ஆதரித்து சமூக வலைதளங்களில் கொண்டாடிய கல்லூரி மாணவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் பயங்கர வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ - முகமது தீவிரவாதிகள் நிகழ்த்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே, பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குள் புகுந்து, நமது விமானப்படை வீரர்கள் துல்லியத் தாக்குதலை நடத்தினர். இதில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 40 வீரர்களை பலி கொண்ட இந்த புல்வாமா தாக்குதல் நிகழ்த்தப்பட்ட தினத்தை கறுப்பு தினமாக பாதுகாப்புப் படையினர் அனுசரித்து வருகின்றனர்.

புல்வாமா தாக்குதலுக்கு ஆதரவு
இந்நிலையில், இந்த புல்வாமா தாக்குதலை, பெங்களூரின் கச்சார்கனஹல்லி பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான ஃபாய்ஸ் ரஷீத் (21) என்பவர் ஆதரித்தும், கொண்டாடியும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்திருக்கிறார். இதுகுறித்து தொடர்ச்சியாக புகார்கள் வரவே, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ரஷீத்தின் சமூக வலைதள நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர்.

23 கமெண்டுகள்..
அப்போது, ரஷீத் தனது பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் மட்டுமல்லாமல் செய்திச் சேனல்களில் யூடியூப், பேஸ்புக் பக்கங்களிலும் சென்று புல்வாமா தாக்குதலை ஆதரித்து கமெண்ட் செய்து வருவது தெரியவந்தது. இவ்வாறு 23 முறை அவர் வெவ்வேறு சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வந்துள்ளார். இதையடுத்து, போலீஸார் ரஷீத்தை 2019-ம் ஆண்டு கைது செய்தனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த வழக்கானது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் அவர் மீதான குற்றங்கள் அனைத்தும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது. மேலும், அதன் அடிப்படையில் அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. வெவ்வேறு சமூகத்தினர் இடையே பகையை தூண்டுதல், தேசத்துரோகம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர்.

5 ஆண்டு சிறை
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: புல்வாமா தாக்குதலுக்கு ஆதரவாக ஃபாய்ஸ் ரஷீத் ஓரிரு கமெண்டுகளை அல்ல. 23 கமெண்டுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். மேலும் அவர் சாமானியரோ அல்லது படிப்பறிவு இல்லாத நபரோ இல்லை. அவர் ஒரு பொறியியல் கல்லூரி மாணவர். எனவே, தான் என்ன செய்கிறோம் என்பது தெரிந்துதான் அவர் இந்த காரியங்களில் ஈடுபட்டுள்ளார். இந்தியராக இல்லாத பட்சத்தில்தான், நமது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அறிந்து ஒருவரால் மகிழ்ச்சி அடைய முடியும். எனவே, இந்தியாவுக்கு எதிராக ரஷீத் செய்த குற்றம் மிகக் கொடூரமான குற்றமாக கருதப்படுகிறது. இந்தக் குற்றத்துக்காக அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இவ்வாறு தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications