பெரும் பயம், குழப்பம்.. பெங்களூர் டாக்டருக்கு ஓமிக்ரான் வந்தது எப்படி? லோக்கல் பரவல் தொடங்கிவிட்டதா?
பெங்களூர்: பெங்களூரில் இருக்கும் இரண்டு பேருக்கு ஓமிக்ரான் கொரோனா வந்த நிலையில் அதில் டாக்டர் ஒருவருக்கு எப்படி கொரோனா வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகளை இந்த சம்பவம் குழப்பி உள்ளது.
Recommended Video
உலகம் முழுக்க அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கும் ஓமிக்ரான் கொரோனா தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது. கடந்த மாதம் முதல் வாரம்தான் ஓமிக்ரான் கொரோனா தென்னாப்பிரிக்காவில் வேகமாக பரவ தொடங்கியது.
அதற்குள் 30 நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் ஓமிக்ரான் கண்டறியப்படாமல் இருந்த நிலையில், தற்போது இந்தியாவிலும் 2 கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று உறுதியானது
இரண்டு ஓமிக்ரான் கேஸ்களும் நேற்று பெங்களூரில் உறுதி செய்யப்பட்டது. இதில் ஒருவர் தென்னாப்பிரிக்க பயணி. இவர் பெங்களூர் வந்ததுமே அவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் கொரோனா மாதிரி ஜீன் சோதனை செய்யப்பட்ட நிலையில் முதல் கட்ட சோதனையில் அவருக்கு வந்திருப்பது டெல்டா, பீட்டா வகை கொரோனா கிடையாது என்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஓமிக்ரான் வகை கொரோனாவாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது.

கொரோனா
கடந்த 20ம் தேதி இவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூர் வந்து அதே நாள் பாசிட்டிவ் என்று கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டவர் 23ம் தேதி எடுக்கப்பட்ட டெஸ்டில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இதனால் அதே நாள் இந்தியாவில் இருந்து துபாய் சென்றுள்ளார். இவர்துபாய் கிளம்பி சென்று சரியாக ஒரு வாரம் கழித்து இப்போது அவரின் ஜீன் ஸ்க்வன்சிங் முடிவு வந்துள்ளது. இதில் அவருக்கு ஓமிக்ரான் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

டாக்டர்
இவர் இந்தியாவில் இருந்து துபாய் சென்றுவிட்டதால் அவரால் பெரிய சிக்கல் இல்லை. ஆனால் உண்மையான சிக்கலே பெங்களூர் டாக்டர் ஒருவருக்கு ஓமிக்ரான் வந்தது எப்படி என்பதுதான். அந்த தென்னாப்பிரிக்க பயணியை இந்த பெங்களூர் டாக்டர் பார்க்கவில்லை. இருவருக்கும் தொடர்பு இல்லை. இந்த பெங்களூர் டாக்டர் முன்கள பணியாளர் என்பதால் ஏற்கனவே இரண்டு டோஸ் போட்டுவிட்டார்.

கொரோனா
ஏற்கனவே இவருக்கு ஒருமுறை கொரோனா வந்துள்ளது. இவரின் வயது 46தான். இப்படி இருக்கும் போது இவருக்கு கடந்த நவம்பர் 20ம் தேதி மூச்சு பிரச்சனை, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 22ம் தேதி இவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு பாசிட்டிவ் என்று வந்தது. இதையடுத்து அவர் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 27ம் தேதி இவர் உடல்நிலை சரியான நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

குழப்பம்
இவர் தற்போது நல்ல உடல்நிலையில் இருந்தாலும் லேசான காய்ச்சல் இருப்பதாக கூறப்படுகிறது. இவரின் கொரோனா ஜீன் சோதனை முடிவில் அவருக்கு ஓமிக்ரான் இருப்பது உறுதியாகி உள்ளது. அந்த டாக்டர் பெங்களூர் மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். கடந்த 1 வருடத்தில் அவர் வெளிநாடு செல்லவில்லை. கடந்த 2 மாதமாக அவர் வெளியூர் செல்லவில்லை. அப்படி இருக்கும் போது அவருக்கு ஓமிக்ரான் வந்தது எப்படி என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அச்சம்
இவர் பெங்களூர் மருத்துவமனையில் வேலை பார்ப்பதால் அதிகாரிகள் இடையே கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை வேறு சில கொரோனா நோயாளிகள் ஓமிக்ரான் வைரஸோடு சுற்றிக்கொண்டு இருக்கிறார்களோ, இது லோக்கல் பரவலாக மாறிவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இவருடன் நெருக்கமாக இருந்த 3 பேருக்கு கொரோனா வந்துள்ளது. அதுவும் ஓமிக்ரான் வகையா என்று சோதனை செய்ய ஜீன் டெஸ்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாடு செல்லாத நபர் ஓமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டது புதிராக உள்ளது.












Click it and Unblock the Notifications