அயோத்தி கும்பாபிஷேக நாளில் பரபரப்பு! பாஜக எம்பியை உள்ளே அனுமதிக்காத கர்நாடக தலித் கிராமம்! என்னாச்சு
பெங்களூர்: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறும் நிலையில், மைசூர் அருகே உள்ள கிராமத்திற்கு வர முயன்ற பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியில் இப்போது ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இன்று அந்த ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த கும்பாபிஷேகத்திற்காக அயோத்தியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அயோத்தி கோயில்: ராமர் கோயில் கும்பாபிஷேகம் அயோத்தியில் நடைபெறும் நிலையில், கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள கிராமத்திற்கு வர முயன்ற பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவை அக்கிராம மக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. அயோத்தி கோயிலில் நிறுவப்படும் ராமர் சிலையைச் செதுக்கப் பயன்படுத்தப்பட்ட கல்லை இந்த கிராமம் தான் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் தங்களை கண்டுகொள்ளாமல் சிம்ஹா புறக்கணித்தாக கூறி அவரை அக்கிராம மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். சிம்ஹா கடந்த 2014 மற்றும் 2019 என இரண்டு முறை இப்பகுதியில் இருந்து லோக்சபாவுக்கு தேர்வாகியிருந்தார். அதேநேரம் இவர் தலித்துகளைப் பற்றி இழிவான கருத்துகளைக் கூறி வருகிறார் என்ற புகார் ஏற்கனவே இவர் மீது இருந்தது.
வாக்குவாதம்: காவி துண்டு அணிந்து வந்த சிம்ஹாவை அக்கிராம மக்கள் தடுத்து நிறுத்தும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. சிம்ஹாவை தடுத்து நிறுத்தும் கிராம மக்கள் கன்னடத்தில் கூச்சலிடுவதும் அதில் தெளிவாகப் பதிவாகி இருக்கிறது. கிராம மக்களை சிம்ஹாவுடன் பாதுகாப்பிற்குச் சென்ற போலீசார் பிடித்து இழுத்துச் செல்வதும் அதில் பதிவாகியுள்ளது.
அதில் பச்சை நிற சட்டை அணிந்த ஒருவர் தான் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார். அவரை போலீசார் பிடித்து இழுத்துச் சென்றனர். இரு தரப்பிலும் ஆக்ரோஷமாகச் சத்தமிட்டுக் கொள்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. சுமார் 2.30 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் இறுதியில், கடுப்பாகும் சிம்ஹா அங்கிருந்து கிளம்புகிறார். அங்கிருந்த ஒரு பெண் போலீஸ் அதிகாரி சிம்ஹாவை பத்திரமாக காரில் ஏற்றுகிறார். பிரதாப் சிம்ஹாவும் அங்கிருந்து கிளம்புகிறார்.
எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளவில்லை: அயோத்தியில் ராமர் கோவில் நடைபெறும் நிலையில், அதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. இருப்பினும், இந்த அயோத்தி நிகழ்வில் எதிர்க்கட்சிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், மத நிகழ்வை பாஜக அரசியலாக்குவதற்காக எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடியுள்ளன.
யார் இவர்: இந்த சிம்ஹா வேறு யாரும் இல்லை. கடந்த மாதம் புது நாடாளுமன்ற கட்டிடத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டவர்களுக்கு பாஸ் வாங்கிக் கொடுத்ததாகச் சர்ச்சையில் சிக்கியவர் தான் இவர். சாகர் சர்மா மற்றும் டி மனோரஞ்சன் உள்ளிட்டோருக்கு இவரது எம்பி அலுவலகம் தான் பாஸ்வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டவர்களுக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் நாடாளுமன்றத்தைச் சுற்றிப் பார்க்க விரும்புவதாகக் கூறியதால் பாஸ் மட்டுமே தான் வழங்கியதாக சிம்ஹா விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications