விரிவாகும் பெங்களூர்.. கனகபுராவை பெங்களூருடன் இணைக்கும் டிகே சிவக்குமார்? பலே திட்டம்
பெங்களூர்: ராமநகர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான கனகபுராவை பெங்களூருடன் இணைக்க கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் அவர் பேசிய பேச்சின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி என்ன? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
பெங்களூரின் மக்கள் தொகை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெங்களூரின் பரபரப்பளவும் அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பு கூட பெங்களூர் புறநகர் மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் பெங்களூர் மாநகராட்சி நிர்வாகத்துக்குள் கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில் தான் மீண்டும் பெங்களூர் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு இதற்கான பணியை துணை முதல்வரும், பெங்களூர் நகர வளச்சி துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு டிகே சிவக்குமார் தனது சொந்த தொகுதியான ராமநகர் மாவட்டம் கனகபுராவை பெங்களூருடன் இணைக்க வியூகம் வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது பெங்களூரில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் கனகபுரா உள்ளது. இந்த கனகபுரா கடந்த 2007 க்கு முன்பு பெங்களூர் புறநகர் மாவட்டத்தின் கீழ் இருந்தது. அதற்கு பிறகு 2007 ல் ஜேடிஎஸ் சார்பில் முதல்வராக இருந்த எச்டி குமாரசாமி ராமநகர் மாவட்டத்தை உருவாக்கினார். அப்போது கனகபுரா பெங்களூர் புறநகர் மாவட்டத்தில் இருந்து பிரித்து ராமநகர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் தான் டிகே சிவக்குமார் தனது சொந்த ஊர் மற்றும் சொந்த தொகுதியான கனகபுராவை பெங்களூருவுடன் இணைக்க திட்டமிட்டுள்ளார். மேலும் சமீபத்திய அவரது பேச்சில் இருந்து அது உறுதியாகி உள்ளது. அதாவது கனகபுரா அருகே உள்ள சிவனஹள்ளி கிராமத்தில் உள்ள கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் டிகே சிவக்குமார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‛‛பெங்களூர் நகர வளர்ச்சி துறையை நான் நிர்வகித்து வருகிறேன். பெங்களூரை சேர்ந்தவர்களுக்கு உங்களின் நிலத்தை விற்பனை செய்ய வேண்டும். ஏனென்றால் நீங்கள் ராமநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இல்லை. நீங்கள் பெங்களூரை சேர்ந்தவர்கள். இதனை நினைவில் வைத்து கொள்ளுங்கள். என்னால் உங்களுக்கு பணம் கொடுக்க முடியாது. ஆனால் உங்களின் சொத்துகளின் மதிப்பை என்னால் 10 மடங்கு வரை உயர்த்துவதற்கான வாய்ப்பை கடவுள் எனக்கு தந்துள்ளார்'' என்றார்.
இதன்மூலம் கனகபுராவை பெங்களூருடன் இணைக்க அவர் திட்டமிட்டுள்ளது உறுதியாகி உள்ளது. மேலும் கனகபுராவை பெங்களூருவுடன் இணைப்பதன் மூலம் அங்கும் ஏராளமான மக்கள் குடியேறுவார்கள். அதோடு அங்கு பல நிறுவனங்கள் தொடங்கப்படலாம். இதன்மூலம் அங்குள்ள நிலம் உள்ளிட்ட சொத்துகளின் மதிப்பு என்பது பல மடங்கு உயரலாம். அதோடு கனகபுராவும் இந்தியா அளவில் பெயர் பெற வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் டிகே சிவக்குமாரின் இந்த திட்டத்துக்கு ஜேடிஎஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் தற்போது இந்த விவகாரம் காங்கிரஸ்-ஜேடிஎஸ் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications